Published : 17 Jul 2025 12:20 AM
Last Updated : 17 Jul 2025 12:20 AM
சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 8 கோட்டங்கள் உள்ளன. இவற்றில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் சுமார் 10 ஆயிர்த்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் இல்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு நியமனம் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக 3,274 ஓட்டுநர் உடன் நடத்துநர் (டிசிசி) பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கடந்த மார்ச் மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் கோட்டத்தில் 756, சேலம் கோட்டத்தில் 486, கோவை கோட்டத்தில் 344, மதுரை கோட்டத்தில் 322, திருநெல்வேலி கோட்டத்தில் 362 பணியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஏப்.21-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 26-ம் தேதி வரை விண்ணப்பத்தை திருத்துவதற்கான அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 27-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. அவர்களுக்கான வினாத்தாளை கடந்த முறையை போலவே அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகம் உட்பட தமிழகம் முழுவதும் 15 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, "விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு தயாரிக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும். ஜூலை 21-ம் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு முடிந்த பிறகு, செய்முறைத் தேர்வு உள்ளிட்டவை நடைபெறும். விரைந்து பணியாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT