Published : 10 Jul 2025 05:13 PM
Last Updated : 10 Jul 2025 05:13 PM
சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,996 காலியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) ஆகிய பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,996 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை தொடர்பான அனைத்து விவரங்களும் அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 12ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே, விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, உரிய விவரங்களை சரி பார்த்து அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அறிப்பு தொடர்பான கோரிக்கை மனுக்களை என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டும் அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பப்படும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று ஜெயந்தி கூறியுள்ளார்.
போட்டித் தேர்வு எப்போது ? - டிஆர்பி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி ஓஎம்ஆர் ஷீட் வடிவில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப் பதற்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் 58 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு பாடத்திட்டங்கள் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பொது அறிவு (10 கேள்விகள்), கல்வி உளவியல் (30 வினாக்கள்) பாடத்திட்டமும் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்த்கக்கது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பதவியில் 3,500-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. தற்போது அந்த இடங்களில் தற்காலிக ஆசிரியர்கள்தான் பணியாற்றி வருகின்றனர்.
தற்போதைய டிஆர்பி தேர்வு மூலம் 1,996 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாலும் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரை மட்டுமின்றி தேவைப்பட்டால் கலந்தாய்வு நடைபெறும் போதும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT