Published : 09 Jul 2025 06:14 PM
Last Updated : 09 Jul 2025 06:14 PM
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் முழு நேரம், பகுதி நேர வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முழு நேர பயிற்சி வகுப்பு மூன்று ஆண்டுகளும், பகுதி நேர வகுப்பு நான்கு ஆண்டுகளும் நடத்தப்படுகிறது.
முழு நேர வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.10,000 ஊக்கத் தொகையும், பகுதி நேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும் வழங்கப் படுகின்றன. எனவே, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 14 முதல் 24 வயதுக்குட்பட்ட இந்து மதத்தை சார்ந்த, நல்ல குரல் வளம் உடைய விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் ஜூலை 31-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இணை ஆணையர், கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை கோயில் அலுவலகத்திலும், அல்லது https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in மற்றும் www.hrce.tn.gov.in ஆகிய இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு jceochn_1.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 044 - 2464 1670, 73390 64101 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT