Published : 09 Jul 2025 04:19 PM
Last Updated : 09 Jul 2025 04:19 PM
சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
நம் நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.
அதன்படி நடப்பாண்டுக்கான 2-ம் கட்ட சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூலை 26 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 3-ல் தொடங்கி 26-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு ஜூலை 26, 27-ம் தேதிகளில் நடைபெற வுள்ளது. இதனால் தேர்வு தேதியை மாற்ற வேண்டுமென என்டிஏ-வுக்கு பட்டதாரிகள் கோரிக்கை வைத்தனர்.
அதையேற்று தேர்வுக்கால அட்டவணையில் என்டிஏ தற்போது மாற்றம் செய்துள்ளது. அதன்படி சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுகள் ஜூலை 28-ம் தேதி ஒரேகட்டமாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடைபெறும். ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை csirnet.nta.ac.in, nta.ac.in ஆகிய வலைத்தளங்களில் அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT