Published : 02 Jul 2025 07:02 PM
Last Updated : 02 Jul 2025 07:02 PM
சென்னை: 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத உள்ள டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வனக்காப்பாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 3,935 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அன்று வெளியிட்டது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அன்றைய தினம் தொடங்கி மே 24-ம் தேதி முடிவடைந்தது.
குருப்-4 தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் பொறியியல் பட்டதாரிகள் என உயர் கல்வித் தகுதி உடையவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர். மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் இணையதளத்தில் புதன்கிழமை மாலை பதிவேற்றம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
குருப்-4 தேர்வை பொருத்தவரையில் நேர்முகத் தேர்வு கிடையாது. எனவே, எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு பணி வாய்ப்பு உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் 3,935 என்ற போதிலும் காலியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலியிடங்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் அளவுக்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கட் ஆப் மதிப்பெண் குறையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT