Published : 18 Jun 2025 06:09 AM
Last Updated : 18 Jun 2025 06:09 AM
சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு பணிநியமன விதிகள் புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து இனிமே்ல் அங்குள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்.
சென்னை கிண்டி தொழிற்பேட்டை வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்நிறுவனம், அயல்நாட்டு வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் முகமையாகச் செயல்படுகிறது. செவிலியர், இன்ஜினீயர், மருத்துவர், தொழில்நுட்ப பணியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் என பல்வேறு பதவிகளில் ஆண்டுதோறும் ஏராளமானோர் இந்நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
பணியாளர் தேர்வு பணியுடன் வெளிநாட்டு பயணச்சீட்டு விற்பனை, பயண ஏற்பாடுகளைச் செய்வது, வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு வசதி போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
கடந்த 1978-ம் முதல் 47 ஆண்டு காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவி மேலாளர், நிர்வாக அலுவலர் என பல்வேறு நிலைகளில் பணியாளர்களும், அலுவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அந்நிறுவனத்தால் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்தனர்.
இதற்கிடையே, அரசு துறைகள் மட்டுமின்றி தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களையும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுசெய்யும் என அரசு முடிவெடுத்தது. அதன்படி, தற்போது தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம், அரசு போக்குவரத்துக்கழகம், சிப்காட், சிட்கோ, டிட்கோ போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில், பொதுத்துறை நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திலும் பணியாளர் நியமனங்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாகவே மேற்கொள்ளப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து, பணிவிதிமுறைகள் புதிதாக உருவாக்கப்பட்டு பொதுத்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதவியின் ஊதிய விகிதமுறைக்கு ஏற்ப காலிப்பணியிடங்கள் குருப்-4, குருப்-2 மற்றும் குருப்-2 ஏ தேர்வு, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலமாக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT