Published : 13 Jun 2025 03:26 PM
Last Updated : 13 Jun 2025 03:26 PM
சென்னை: மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 1,910 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு நடத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தர ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (எலெக்ட்ரிக்கல்) உள்பட 58 விதமான பதவிகளில் 1,910 காலி்யிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு (ஐடிஐ மற்றம் டிப்ளமா கல்வித் தகுதி உடைய பதவிகள்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு ஜூலை 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வெவ்வேறு பதவிகளுக்கான கணினி வழி தேர்வுகள் ஆகஸ்ட் 31 , செப்டம்பர் 7 மற்றும் செப்டம்பர் 11 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும். கூடுதல் விவரங்களை தேர்வாணையத்தின் இணைய தளத்தில் ( www.tnpsc.gov.in ) அறிந்து கொள்ளலாம்.
மேலும், அரசுத் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து காலிப்பணியிடங்கள் அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரசு போக்குவரத்துக்கழக பணிகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிக்கையின்படி, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் (மின்சார வாரியம்) மட்டும் தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் 656 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில் டெக்னீசியன் பதவிகளில் (எலெக்ட்ரிசியன், வெல்டர், டீசல் மெக்கானிக், ஏசி மெக்கானிக், ஸ்டீல் மெட்டர் டிரேட்மேன்) 537 காலியிடங்கள் உள்ளன.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் டெக்னீசியன் பதவிகள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT