Published : 10 Mar 2025 06:22 AM
Last Updated : 10 Mar 2025 06:22 AM

நான் முதல்வன், பிஎம் வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் சென்னையில் இளைஞர்களுக்கான திறன் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்

சென்னை: நான் முதல்வன், பிம் வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான திறன் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்கள் சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இளைஞர்களுக்கான திறன் பயிற்சி அளித்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் நான் முதல்வன் பயிற்சி திட்டம், பிஎம் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 16 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, தொழில் வாய்ப்புகளுக்கு தகுதியானவர்களாக அவர்களை உருவாக்கும் வகையில் நான் முதல்வன் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல் 21 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் விதமாக முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 12 மாத கட்டணமில்லா இலவச திறன்பயிற்சி பிஎம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிகளுக்கான சேர்க்கை முகாம்கள் சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்றும் (மார்ச் 10), வடசென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நாளையும் (மார்ச் 11) நடைபெறுகிறது.

விருப்பமுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், இந்த சேர்க்கை முகாம்களில் பங்கேற்று, இத்திட்டங்களின் கீழ் தொழிற்பயிற்சி பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம். பயிற்சியானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாகவும், ரூ.6 ஆயிரம் ஒருமுறை மானியமாகவும் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை 044-25201163, 9946640017 ஆகிய எண்ணையும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x