Published : 15 Feb 2025 05:30 AM
Last Updated : 15 Feb 2025 05:30 AM
சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் (நேர்காணல் இல்லாதது) மின்சார வாரிய உதவி பொறியாளர் பதவியில் 250 காலியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 1,235 ஆக அதிகரித்துள்ளது.
உதவி பொறியாளர், வேளாண் அலுவலர், புள்ளியியல் ஆய்வாளர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 651 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணித்தேர்வு (நேர்காணல் இல்லாதது) கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டது. அதில் குறிப்பிட்ட பாடங்களுக்கான தேர்வு கணினிவழி தேர்வாகவும், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகிய பொதுவான தேர்வுகள் ஓஎம்ஆர் ஷீட் வடிவிலான தேர்வுகளாகவும் நடத்தப்பட்டன.
இத்தேர்வை ஏறத்தாழ 90 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வுகளுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) நவ.12-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து பல்வேறு பதவிகளின் காலியிடங்களின் எண்ணிக்கை திருத்தியமைக்கப்பட்டதுடன் புதிய பணியிடங்களும் சேர்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுடன் 341 கூடுதலாக சேர்க்கப்பட்டு ஒட்டுமொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்தது. தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது புதிதாக மேலும் 243 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரரராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக்கழக உதவி மேலாளர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 15-லிருந்து 14 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், அக்கழக உதவி பொறியாளர் (சிவில்) பதவியில் உள்ள பணியிடங்கள் 19-லிருந்து பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு மின் பகிர்மான கழக (மின்சார வாரியம்) உதவி பொறியாளர் எலெக்ட்ரிக்கல் பிரிவில் 195 இடங்களும், சிவில் பிரிவில் 30 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 25 இடங்களும் (மொத்தம் 250 தற்போது புதிதாக சேர்க்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,235 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் இடஒதுக்கீடு வாரியான காலியிடங்கள், வயது வரம்பு போன்ற விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT