Published : 29 Jan 2025 06:59 AM
Last Updated : 29 Jan 2025 06:59 AM
சென்னை: வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு தொழில்பிரிவுகளில் டெக்னீசியன்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான நேர்காணல் சென்னையில் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் தமிழக அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்ற வெல்டர், பைப்பிங் ஃபேப்ரிகேட்டர், பைப்பிங் பிட்டர், ஸ்ட்ரக்சர் ஃபேப்ரிகேட்டர், ஸ்ட்ரக்சர் பிட்டர், மில்ரைட் பிட்டர், கிரைன்டர், கேஸ் கட்டர் , பைப்பிங் போர்மேன் ஆகிய டெக்னீசியன்கள் தேவைப்படுகின்றனர்.
குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 ஆண்டு பணி அனுவம் பெற்றிருக்க வேண்டும். வயது 44-க்குள் இருக்க வேண்டும். சம்பலம் பணிக்கு ஏற்ப ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பளத்துடன் உணவு, இருப்பிட வசதியும் வழங்கப்படும்.
மேற்கண்ட பணிகளுக்கான நேர்காணல், ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வளாகத்தில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும். நேர்காணலுக்கு வரும்போது சுயவிவரம், பாஸ்போர்ட் அசல் மற்றும் நகல், ஆதார் நகல், போட்டோ ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
பணிக்கு செல்வோர் விசா கிடைத்த பிறகு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT