Published : 13 Jan 2025 06:45 AM
Last Updated : 13 Jan 2025 06:45 AM
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தொழில்நுட்பப்பிரிவில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 8 உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பில் பாலின சமத்துவம் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் உள்ளமைப்பு பணியாளர்களில் 21 சதவீதம் பெண்களும், வெளி ஒப்பந்த பணியாளர்களில் 50 சதவீதம் பெண்களும் பணியாற்றுகின்றனர்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கையரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பெண்களால் மட்டுமே இயக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களை நிறுவுவதற்கான வாய்ப்புகளை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆராய்கிறது.
இதற்கிடையில், தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெண் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த பெண் பொறியாளர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 30 ஆண்டு (தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்) இருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊதியம் மாதம் ரூ.62,000 ஆகும். விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவத்தின் இணையதளத்தில் https://chennaimetrorail.org/job-notifications/ என்ற URL இல் ஜன.10-ம் தேதி அல்லது அதற்கு முன்னர் வெளியிடப்படும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் பரிசீலனை செய்யப்படும். விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதி பிப்.10-ம் தேதி ஆகும்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் கூறும்போது, "பொறியியல் துறையில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களது வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். இந்த சிறப்பு மற்றும் பிரத்யேகமான பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை, எங்கள் பாலின சமத்துவ இலக்குகளை அடைவதற்கான ஒரு முக்கியமான படியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT