Published : 09 Jan 2025 12:48 PM
Last Updated : 09 Jan 2025 12:48 PM
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர, சென்னை கிண்டியிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப்-2 வுக்கு 507 காலிப்பணியிடங்களும் மற்றும் தொகுதி குரூப்-2 ஏ-வுக்கு 1820 காலிப்பணியிடங்களும், மொத்தமாக 2327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்தாண்டு ஜூன் 20ம் தேதியன்று வெளியிடப்பட்டது. முதல் நிலை தேர்வானது செப்.14 அன்று நடத்தப்பட்டது ,
குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கடந்தாண்டு ஜூலை 18 அன்று தொடங்கப்பட்டு செப்.10ம் தேதி வரை நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 15 நபர்கள் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், தொடர்ந்து குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கடந்தாண்டு அக்.14 அன்று துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த படிவ நகல் , ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை கிண்டியிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும், விவரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT