Published : 10 Dec 2024 05:58 AM
Last Updated : 10 Dec 2024 05:58 AM
சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து வரும் 14-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 14-ம் தேதி (சனிக்கிழமை) மாதவரம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்களும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன வழங்கப்படும்.
தனியார் துறையில் பணிபுரிய விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், சென்னை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியோ, https://forms.gle/qsZbxrrSn547L9ep7 என்ற கூகுள் லிங்க் முலமோ தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT