Published : 30 Apr 2024 06:21 AM
Last Updated : 30 Apr 2024 06:21 AM

‘பின்னலாடை துறையில் வேலை கிடைக்க திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தை அணுகலாம்’

திருப்பூர்: தமிழ்நாடு முழுவதும் வேலை தேடுவோர் பின்னலாடை துறையில் வேலை கிடைக்க திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதார மந்தநிலை, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட தொழில் மந்தநிலை சிறிது சிறிதாக மாறி, இன்று திருப்பூருக்கு வர்த்தக வாய்ப்புகள் அதிகமாக வர தொடங்கியுள்ளன. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பெரும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள், கரோனா தொற்றுக்கு முன்னிருந்த நிலையிலுள்ள அளவுக்கான வர்த்தக வாய்ப்புகளை வழங்க தொடங்கியுள்ளன. மேலும், வங்கதேசம் டிசம்பர் 2027 வரை பெற்றுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்த நீட்டிப்பு, 2027-க்கு மேல் தொடர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற நிலைப்பாட்டில், இந்தியாவில் அதிக அளவு உற்பத்தி கட்டமைப்புகளை அமைக்க ஐரோப்பாவில் இருக்கக்கூடிய பெரு நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

தற்சமயம், திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் ஆர்டர்களை சிறிது, சிறிதாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பணிகளுக்கான ஆட்களின் தேவை அதிகரித்துள்ளது. டெய்லர்கள், செக்கர்கள், உதவியாளர்கள், நிர்வாகத்துக்கான மெர்ச்சண்டைசிங் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.

பெரும் உற்பத்தி நிறுவனங்கள் முன் அனுபவம் இல்லாமல், அனுபவம் மற்றும் திறன் இல்லாதவர்களைகூட வேலைக்கு அமர்த்தி, தங்களது திறன் மேம்பாட்டு மையங்களில் பயிற்சி அளித்து பணி வழங்க தயாராக உள்ளன.

வடமாநில தொழிலாளர்களின் வரத்து தேர்தல் காலமானதால் குறைவாகவே உள்ளது. மேலும் இங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்று வரும் நிலையும் உள்ளது.

டெய்லர்கள், செக்கர்கள், உதவியாளர்கள், பிரிண்டிங், நிட்டிங், டையிங், காம்பேக்டிங் போன்ற பல்வேறு நிலைகளில் உள்ள பணிகளுக்கும் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

வேலை வாய்ப்புகளை தேடி வருபவர்கள் அவரவர்களுக்கு பிடித்தமான வேலையை தேர்வு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை தேடுவோர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை அணுகினால், நிச்சயமாக அவர்களுக்கான பணிகள் உறுதி செய்யப்படும். மேலும், நல்ல ஊதியம், தங்குமிடம் மற்றும் உணவு வசதி அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x