Published : 04 Jul 2014 01:39 PM
Last Updated : 04 Jul 2014 01:39 PM
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு பதுக்கல்களே முக்கிய காரணம் என்று கூறிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, விலைவாசி அதிகரிப்பால் மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று கூறினார்.
மேலும் உணவுப் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்வதால், பணவீக்க சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.
உணவுப் பொருட்களை அதிக அளவில் தேவைக்காக இறக்குமதி செய்வதால், பணவீக்க விகிதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
மாநில உணவுத்துறை அமைச்சர்களுடனான கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், "தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதால், நமது செலவினங்கள் அதிகரிக்கிறது. இதனால் பணவீக்க விகிதம் அதிகரிக்கும்.
பருப்பு வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை, கடந்த மூன்று மாதங்களில் 15-ல் இருந்து 68 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்து இரு வருடங்களாக பருவ மழை பொய்த்ததால், நாட்டின் பல பகுதிகளில் விலை ஏற்றத்திற்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன.
ரூ.25 முதல் ரூ.37 வரை தற்போது விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. அவை தேவையற்றது.
உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் சில உணவுப் பொருட்கள் விலை, பதுக்கல் காரணமாக அதிகரிப்பது வழக்கமானது.
இந்த நிலையில், பதுக்கல் கைமீறிப்போகும் முன்னரே, இதனை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில வாரங்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகின்றபோதிலும், அதன் விலை கடந்த ஆண்டைவிட இவ்வருடம் குறைவாகவே உள்ளது. இதனால் மக்கள் அச்சம்கொள்ள வேண்டாம்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு சற்று கவலைப்படும் விதமாகவே உள்ளது. கடந்த வாரத்தில் கச்சா எண்ணெயின் விலை 111 டாலரிலிருந்து 108.13 டாலர்களாக குறைந்துள்ளது. இதனால் தற்போதைய நிலை மாறலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT