Published : 07 Sep 2022 04:15 AM
Last Updated : 07 Sep 2022 04:15 AM

மந்த நிலையில் இயங்கும் ஈரோடு சந்தை: தசரா, தீபாவளியின்போது மஞ்சள் விலை உயர வாய்ப்பு

ஈரோடு

ஈரோடு சந்தையில் மஞ்சளுக்கான விலையில் பெரிய மாற்றம் இல்லாத நிலையில், தீபாவளி, தசரா பண்டிகைகளின் போது விலை உயரும் வாய்ப்புள்ளதாக மஞ்சள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு, கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது.

ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த சில மாதங்களாக மஞ்சளுக்கான விலையில் பெரிய மாற்றமில்லை. விலை உயர்வை எதிர்பார்த்திருக்கும் விவசாயிகள், அதற்கேற்ப இருப்பு வைத்து விட்டு மீதி மஞ்சளை மட்டுமே விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால், மஞ்சள் வரத்து, விற்பனை மந்தமாகவே இருக்கிறது.

விற்பனை குறைந்தது: கோபி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நேற்று 77 மூட்டை மஞ்சள் வரத்து இருந்த நிலையில், 56 மூட்டைகளும், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், 874 மூட்டைகள் வரத்து இருந்த நிலையில், 706 மூட்டைகளும்,

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,404 மூட்டைகள் விற்பனைக்கு வந்த நிலையில், 708 மூட்டைகளும், ஈரோடு கூட்டுறவு சங்கத்தில் 782 மூட்டைகள் விற்பனைக்கு வந்ததில், 640 மூட்டைகளும் மட்டுமே விற்பனையாகின.

மஞ்சள் விலை விவரம்: பெருந்துறையில் விரலி ரகம் குவின்டால் ரூ.5,799 முதல் அதிகபட்சமாக ரூ.8,219, கிழங்கு மஞ்சள் ரூ.5,025 முதல் ரூ.6,869; ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விரலி ரகம் ரூ.5,634 முதல் ரூ.7,699, கிழங்கு மஞ்சள் ரூ.5,333 முதல் ரூ.6,529;

ஈரோடு கூட்டுறவு சங்கத்தில் விரலி ரகம் ரூ.5,818 முதல் ரூ.7,859, கிழங்கு மஞ்சள் ரூ.5,400 முதல் ரூ.6,859; கோபி கூட்டுறவு சங்கத்தில் விரலி ரகம் ரூ.6,269 முதல் ரூ.6,989, கிழங்கு மஞ்சள் ரூ.5,799 முதல் ரூ.6,889 வரை விற்பனையானது.

இது குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்புத் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் கூறியதாவது: தேவைக்கு ஏற்ப தற்போது மஞ்சள் விற்பனையின் அளவு இருப்பதால் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.

தீபாவளி, தசரா போன்ற பண்டிகைகள் வரும்போது, மஞ்சளின் தேவை அதிகரிக்கும். அப்போது விற்பனை அதிகரித்தால், விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் விளையும் மஞ்சளின் விலையைக் குறைத்து விற்பதற்கு அங்குள்ள விவசாயிகள், வியாபாரிகள் முன்வருகின்றனர்.

இதனால், ஈரோடு சந்தையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மழையினால் மஞ்சள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுமா என்பது தீபாவளிக்குப் பின்பே தெரிய வரும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x