Published : 03 Apr 2022 10:00 AM
Last Updated : 03 Apr 2022 10:00 AM
பட்டுச் சேலைகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் பட்டுச் சேலைகள் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் விற்பனையில் சரிவு ஏற்பட்டு நெசவாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று நெசவாளர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பட்டுக்கு பெயர் பெற்ற நகரம் காஞ்சிபுரம். காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் வாங்குவதை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கைத்தறி நெசவை நம்பி 10,350 குடும்பங்களும், சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பட்டு நெசவையே நம்பியுள்ளனர். இவர்கள் நெய்யும் பட்டுச் சேலைகளை விற்பனை செய்ய பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு மொத்தமாக 1.8 லட்சம் மீட்டர் அளவுள்ள பட்டுச் சேலைகளை நெசவாளர்கள் நெய்து தந்துள்ளனர். கூட்டுறவு, தனியார் நிறுவனங்கள் மூலம் பட்டு சேலைகள் ஆண்டுதோறும் ரூ.500 கோடி அளவுக்கு காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு வர்த்தகம் நடைபெறுகிறது.
பட்டுச் சேலை செய்வதற்கான மூலப் பொருட்களின் விலை கடந்த ஓராண்டில் கடுமையாக உயர்ந்துள்ளது. பட்டுச் சேலை செய்வதற்கு தேவைப்படும் கோறா(சாயம் ஏற்றப்படாத பட்டு நூல்) ஒரு கிலோ ரூ.4,500-ல் இருந்து ரூ.6,800-ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் பட்டு நூல் ரூ.5-ல் இருந்து ரூ.9 ஆக உயர்ந்துள்ளது. ஒரு மார்க் எனப்படும் 242 கிராம் எடை கொண்ட சரிகை கடந்த ஆண்டு ரூ.11,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை ரூ.17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக தற்போது நெய்யப்படும் பட்டுச் சேலைகள் விலையை 20 சதவீதம்அளவுக்கு உயர்த்தி விற்க வேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்பட்டுச் சேலைகள் விற்பனை பாதிக்கப்படுவதுடன், நெசவாளர்களுக்கான வேலைவாய்ப்புகளும் குறையத் தொடங்குகின்றன. ஏற்கெனவே வறுமையில் வாடும் நெசவாளர்கள் இந்த விலை உயர்வால் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பட்டு நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கே.எஸ்.பி கைத்தறி தொழிற் சங்கத்தின் துணைச் செயலர் கே.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “பட்டுச் சேலைகள் விற்பனையை நம்பித்தான் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உள்ளது. பட்டுச் சேலைகள் விற்பனை பாதிக்கப்பட்டால் வியாபாரிகள் மட்டும் பாதிக்கப்பட மாட்டார்கள். சேலைகள் விற்பனை ஆகவில்லையென்றால் புதிய சேலைகள் நெய்வதற்கு நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்காது. கூட்டுறவு சங்கங்கள் மூலமும் குறைந்த அளவு வேலைகளே கிடைக்கும்.இதனால் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. உடனடியாக கோறா விலையைக் குறைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப வரியை நீக்கி வெளிநாடுகளில் இருந்து கோறா இறக்குமதி செய்ய வேண்டும், நெசவுத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சரிகைக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT