Published : 19 Mar 2022 04:20 AM
Last Updated : 19 Mar 2022 04:20 AM
கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்படும் என்று, தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, தென்னைநார் தொழில்முனைவோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தென்னைநாரை மூலப்பொருட்களாக கொண்டு உற்பத்தி செய்யப்படும் கயிறு, பித், காயர் ஜியோ டெக்ஸ்டைல், காயர் நான் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல், கார்டன் பொருட்கள் உள்ளிட்ட 250 வகையான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதியால் ஆண்டுக்கு ரூ.3,800 கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது. மேலும், ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் உள்நாட்டு சந்தை விற்பனை நடைபெறுகிறது.
உலகளவில் தென்னைநார் உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. தென்னை நார் கயிறு உற்பத்தியில் நாட்டில் தமிழகமும், தமிழகத்தில் கோவை மாவட்டமும் முதலிடத்தில் உள்ளன. தென்னைநார் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மூலமாக அந்நிய செலாவணி அதிகம் ஈட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், கோவையில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்படும். இதற்கு முதற்கட்டமாக ரூ.5 கோடி தொடக்க மூலதனமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டதை, தென்னைநார் தொழில்முனைவோர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து கொக்கோமேன்ஸ் அமைப்பின் தலைவரும், ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சிக் குழுமத்தின் ஆலோசகருமான எஸ்.கே.கௌதமன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "உலகளவில் தென்னைநார் உற்பத்தியில் கோவை முதலிடம் பெற்றுள்ளது. அதனை கருத்தில்கொண்டு மதிப்புக்கூட்டப்பட்ட மற்றும் மதிப்புகூட்டப்படும் பொருட்களுக்கான விற்பனையை மேம்படுத்த கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதை, கோவை மாவட்ட தென்னைநார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (கொக்கோமேன்ஸ் மற்றும் தமிழ்நாடு தென்னைநார் உற்பத்தியாளர்கள்) சார்பாகவும் வரவேற்கிறோம்.
மேலும், நீர்நிலைகள், குட்டைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில், கரைகளை பலப்படுத்தும் பணிகளுக்கு கயிறு உற்பத்தி செய்யும் காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல் உபயோகப்படுத்த வேண்டும். இதனால், இருகரைகளும் நீண்ட காலம் எந்தவித பாதிப்பும் இன்றி பலமாக இருக்கும். நலிந்த நிலையில் உள்ள கயிறு தொழில் மேன்மையடையும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT