Published : 27 Feb 2022 06:39 PM
Last Updated : 27 Feb 2022 06:39 PM
புதுடெல்லி: அன்னிய செலாவணி ஒழுங்குமுறை முறைப்படுத்தும் (பிஎம்எல்ஏ) சட்டம் கொடூரமான சட்டம் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அன்னியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டம் (பிஎம்எல்ஏ) கொடூரமானது என்றும் அதை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 242 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி. மகேஸ்வரி, சி.டி ரவிகுமார் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த சட்டத்தில் ஜாமீனில் வெளி வருவதற்கு கடுமையான சட்ட விதிகள் உள்ளன, போதிய ஆதாரம் இல்லாமல் அதாவது முதல் தகவல் அறிக்கை (இசிஐஆர்) நகலை அளிக்காமலேயே சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வது போன்ற கொடூரமான செயல்பாடுகளை இந்த சட்டம் கொண்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விதியின்கீழ் நடவடிக்கை எடுக்கும் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி கடந்த 20 ஆண்டுகளில் மொத்தமே 313 நபர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். தனிநபர்களை பாதுகாக்கும் அனைத்து அம்சங்களும் பிஎம்எல்ஏ-வில் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், குற்றத்தின் தீவிரத் தன்மையைப் பொறுத்துதான் எப்ஐஆர் வழங்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார்.
கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 2,086 வழக்குகள்தான் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் இதே காலகட்டத்தில் போலீஸார் பதிவு செய்துள்ள எப்ஐஆர் எண்ணிக்கை 33 லட்சம் என்று குறிப்பிட்டார். பிஎம்எல்ஏ சட்டத்தின்கீழ் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4,700 என்றும் குறிப்பிட்டார். வங்கிகளில் பணத்தைப் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, மெகுல் சோக்ஸி, நீரவ் மோடி ஆகியோரது சொத்துகளில் ரூ. 18 ஆயிரம் கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பிஎம்எல்ஏ போடப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்த அரசு வழக்கறிஞர், 2016-17-ம் நிதி ஆண்டில் 200 வழக்குகளும், 2017-18-ம் நிதி ஆண்டில் 148 வழக்குகளும், 2018-19-ம் நிதி ஆண்டில் 195 வழக்குகளும், 2019-20-ம் நிதி ஆண்டில் 562 வழக்குகளும், 2020-21-ம் நிதி ஆண்டில் 981 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேபோன்ற மோசடி வழக்குகளில் பிற நாடுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையையும் அவர் பட்டியலிட்டார். இங்கிலாந்தில் 7,900 வழக்குகளும், அமெரிக்காவில் 1,532 வழக்குகளும், சீனாவில் 4,691 வழக்குகளும், ஹாங்காங்கில் 1,832 வழக்குகளும், ரஷியாவில் 2,764 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக்க குறிப்பிட்டார்.
அன்னியச் செலாவணி விதி மீறல் நடவடிக்கைகளில் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள்தான் நமது நாட்டிலும் பின்பற்றப்படுகிறது. சட்ட ரீதியாகவும், நியாயமான முறையிலும் நடவடிக்கைகள் மாறிவரும் சூழலுக்கேற்ப எடுக்கப்படுகிறது என்றும் அவர் நீதிபதிகளிடம் விளக்கமளித்தார்.
பிஎம்எல்ஏ மீதான நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உள்பட்டதாக உள்ளதா என்பதை ஆராய வேண்டியுள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT