Published : 06 Feb 2022 06:37 AM
Last Updated : 06 Feb 2022 06:37 AM
கலைக்களஞ்சியம் என்பதற்கு அனைத்துத் துறைகளைப் பற்றிய தகவலை உள்ளடக்கிய தொகுப்பு என்றும் பாக்கெட்புத்தகம் என்பதற்கு சட்டைப் பையினுள் வைத்துக்கொள்ளும் அளவுக்கான கையடக்க நோட்டுப் புத்தகம் என்றும் வெப்ஸ்டர் அகராதி விளக்கம் தருகிறது. மத்திய பட்ஜெட் இந்த இரண்டு வரையறைகளுக்கும் பொருந்திப் போகிறது. அதாவது, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி, சமூக - பொருளாதார வளர்ச்சிக்கான அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. அத்தகைய நீண்டகால வளர்ச்சிக்கான கொள்கைகள் குறுகிய நேரத்தில் அறிவிக்கப்பட்டும் உள்ளது.
நீண்டகால நோக்கு
பட்ஜெட் தினத்தை ஒரு போட்டி நிகழ்ச்சியின் இறுதி நாள் என்று நாம் கொண்டால், பட்ஜெட்டுக்கு முந்தைய தினம் வெளியான பொருளாதார அறிக்கையை இறுதி நாளுக்கான ஒத்திகை என்று கூறலாம். அதில், முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் 2022-23-லிருந்து இந்தியாவின் வளர்ச்சியை நிலைநிறுத்த சரியான கொள்கை வகுப்பையும், விநியோக சீர்திருத்தத்தையும் எதிர்பார்ப்பதாகக் கூறினார். அதற்கான பாதையைத்தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
அடுத்த 25 ஆண்டு காலத்துக்கான, அதாவது இந்தியா அதன் நூற்றாண்டு சுதந்திரத்தை கொண்டாடும் ஆண்டு வரைக்குமான பயணத்துக்கான வழிகாட்டுதலை இந்த பட்ஜெட் வழங்கியுள்ளது. நாட்டின் நீடித்த நலம் மீது அக்கறை கொண்ட ஒரு தாயின் வெளிப்பாட்டை ஒத்திருந்தது நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள்.
உள்கட்டமைப்பு, மின்சாரம், வாகனம், தொலைத் தொடர்பு, உற்பத்தி, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், அடுத்த தலைமுறை வேளாண்மை, வீட்டு வசதி, நிதி, பாதுகாப்பு என அனைத்து முக்கியமான துறைகள் சார்ந்தும் நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவைகள் மீதும் அவரது பட்ஜெட் கூடுதல் கவனம்செலுத்தியுள்ளது. அரசின் செலவின ஒதுக்கீடு ரூ.7.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது சந்தேகத்துக்கிடமின்றி நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை அதிகரிக்கும். தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும். சமூகமற்றும் டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்துவதாக அமையும். கரோனா காரணமாக நாட்டின் தனிநபர் வருவாய் மற்றும் செலவினம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. அனைத்தையும் கணக்கில் கொண்டு, செலவினத்துக்கு நிதி ஒதுக்கி யிருப்பது அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சிறந்த தலைமைக்கு சான்று பகிர்கிறது.
வளர்ச்சி ஊக்கிகள்
கதி சக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், ட்ரோன் சக்தி, நதிகள் இணைப்பு, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான முக்கியத்துவம் ஆகியவை நாட்டின் வளர்ச்சியை தூண்டும் காரணிகளாக உள்ளன. பெரு நிறுவனங்களுக்கான அறிவிப்புகளுடன், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் உள்ளிட்டவற்றின் வளர்ச்சிக்கு வெவ்வேறு திட்டங்கள் வழியாக ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறைக்கு பட்ஜெட்டில் வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலக அளவில் இந்தியாவை முதன்மை நாடாக மாற்றக்கூடியதாக அமையும். மொத்தத்தில் இந்த பட்ஜெட் இந்தியாவின் பொருளாதார சங்கிலியை முழுமையாக உள்ளடக்கியுள்ளது.
பாதுகாப்பு துறையில் தனியார் நிறுவனங்கள்
பாதுகாப்புத் துறையையும் ஆத்மநிர்பார் தொட்டுள்ளது. ராணுவ தளவாடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 68 சதவீதம் உள்நாட்டு தளவாடங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பானது, உள்நாட்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. பாதுகாப்புத் துறை சம்பந்தமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளில் ஈடுபட கல்வி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் மற்றும் தனியர் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதெற்கென ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கான நிதியில் 25 சதவீதம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க அறிவிப்பு ஆகும்.
முதல் முறையாக கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 1 லட்சம் கோடியை தாண்டியிருந்தாலும், இந்தியாவின் உயர்கல்வியில் 75% பங்கு வகிக்கும் தனியார் நிறுவனங்கள் சார்ந்து இந்த பட்ஜெட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுடனான பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உறவானது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்டதோடு மட்டும் குறுகிவிடாமல், கல்வித் துறையில் கற்றல் செயல்பாட்டையும், புதிய அறிவு உருவாக்கத்தை மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.
வரி விலக்கு நடைமுறையிலிருந்து படிப்படியாக விலகி, வரி விலக்கற்ற நடைமுறைக்கு இந்த பட்ஜெட் வந்திருப்பது, முந்தைய கால பட்ஜெட்டுகளுக்கும் இப்போதைய பட்ஜெட்டுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாகக் காட்டுகிறது. அடுத்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர், கல்வி நிறுவனங்களை நடத்தும் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்ந்து ஆக்கப்பூர்வமான திட்டங்களை வழங்க வேண்டும் என்று ஒரு கல்வியாளராக நான் எதிர்பார்க்கிறேன். இவை அனைத்துக்கும் திறந்த மனமும், இதயமும் வேண்டும். நிர்மலா சீதாராமனிடம் அவை இரண்டும் தாராளமாகவே உள்ளன
(பிசினஸ்லைன் நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)
கட்டுரையாளர் எஸ்.வைத்தியசுப்ரமணியம், துணைவேந்தர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT