Published : 06 Feb 2020 09:57 AM
Last Updated : 06 Feb 2020 09:57 AM
சேவைத் துறை வளர்ச்சி குறியீட்டெண் கடந்த ஜனவரி மாதத்தில் 55.5 ஆக உயர்ந்துள்ளது. கடந்த7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக நேற்றுவெளியான புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தொடக்கமே சேவைத் துறை வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக புள்ளி விவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
புதிதாகப் பெறப்பட்ட ஆர்டர்களின் பலனாக சேவைத் துறை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனால் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. உள்நாட்டில் அதிக அளவிலான தேவை உருவானதும் இதற்கு முக்கிய காரணமாகும்.
தொழில் வருமானம் உயரும்போது சேவைத் துறை செயல்பாடுகளும் உயரும். இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். 2012-ம் ஆண்டிலிருந்து காணப்பட்ட சரிவு தற்போது மீண்டுள்ளது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பொருள்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சேவைத் துறையில் காணப்படும் வளர்ச்சியானது பணவீக்க நெருக்குதலை உருவாக்கும். ஏனெனில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான மூலப் பொருள் விலையும் உயர்ந்து காணப்படுவதே இதற்குக் காரணமாகும். பொருள் விலையேற்றம் காரணமாக பணவீக்கம் உயரும். 2013-ம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய சூழல் தற்போது உருவாகியுள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு கவலையளிக்கும் விஷயமாகும். ஏனெனில் சேவைத்துறை பெரிதும் நம்பியிருப்பது பொருள்களின் விலையைப் பொருத்தே அமைகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த மூலப் பொருள் விலையேற்றத்தை நிறுவனங்கள் தங்கள் லாபத்தைக் குறைத்துக் கொண்டு ஏற்றன. ஆனால் இனியும் இந்நிலை தொடர முடியாத அளவுக்குநிறுவனங்களுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேறுவழியின்று நுகர்வோர் தலையில்தான் விலை உயர்வின் தாக்கத்தை வைக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் காலங்களில் பொருள்களின் விலையும் கணிசமாக உயரும் என்றும், இதனால் விற்பனை பாதிக்கப்படும் என்றும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் நிறுவனங்களின் லாபம் குறையும் என்பதால் கொள்முதல் செய்வதை குறைக்கும் என்று தெரிவித்துள்ளது. பொருளாதார தேக்க நிலை, அதிகரிக்கும் பணவீக்கம் உள்ளிட்ட சூழலில் நடப்பு நிதி ஆண்டுக்கான கடைசி (6-வது) நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT