Published : 03 Feb 2020 09:33 AM
Last Updated : 03 Feb 2020 09:33 AM
மருத்துவ உபகரணங்கள் இறக்குமதிக்கு செஸ் வரி விதிக்கப்பட்டிருப்பதால் அவ்வகை உபகரணங்களின் விலை அதிகரிக்கும். விளைவாக, சிகிச்சை பெறும் மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்வார்கள் என்று இந்திய மருத்துவ தொழில்நுட்பச் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்றநோக்கில் கொண்டு வரப்பட்ட ‘பிரதன் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா’ திட்டத்துக்கு எதிராகவே மத்திய அரசின் இந்த வரி விதிப்பு அமைந்துள்ளது என்று அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது.
‘மருத்துவ உபகரணங்களுக்கு ஏற்கெனவே 7.5 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது செஸ் வரியாக 5 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் விற்பனை விலை அதிகரிக்கும். இந்த விலை உயர்வை இறுதியாக சிகிச்சை பெறுபவர்களே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த வகையில் இந்த வரி விதிப்பு மருத்துவ துறையை மட்டுமல்ல மக்களையும் நேரடியாக பாதிக்கக் கூடியது.
முக்கிய உபகரணங்கள் எதுவும்இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. பெரும்பாலான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்த வரி விதிப்பால் சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் மருத்துவ உபகரணங்கள் உள்நாட்டுக்குள் கொண்டுவருவது அதிகரிக்கும்’ என்று இந்திய மருத்துவதொழில்நுட்ப சங்கத்தின் இயக்குநர் சஞ்சய் பூட்டானி தெரிவித்தார்.
மருத்துவ உபகரணங்களில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அதற்கு 5 சதவீத செஸ் வரி விதிப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கென்று 2020-21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.67,484 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டைவிட இது 5 சதவீதம் அதிகம். ஆனால் மத்திய அரசு 2020-21-ம் நிதி ஆண்டில் நாமினல் ஜிடிபி 10 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. அந்த ஜிடிபி விகிதத்துடன் ஒப்பிடுகையில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி அளவு மிகக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT