Published : 05 Jan 2020 07:53 PM
Last Updated : 05 Jan 2020 07:53 PM

டாடா நிறுவன பதவியில் மீண்டும் அமரும் எண்ணம் இல்லை: சைரஸ் மிஸ்திரி உறுதி

புதுடெல்லி

டாடா நிறுவன பதவியில் மீண்டும் அமரும் எண்ணம் இல்லை என சைரஸ் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

1965-ம் ஆண்டு சைரஸ் மிஸ்திரியின் தந்தை பலோன்ஜி மிஸ்திரி டாடா சன்ஸ் பங்குகளை வாங்கினார். 1980 ஆம் ஆண்டு அவர் டாடா சன்ஸ் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு அவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். 2004-ம் ஆண்டு சைரஸ் மிஸ்திரி, டாடா சன்ஸ் குழுமத்தில் சேர்ந்தார். 2012-ம் ஆண்டில் அவர் டாடா சன்ஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி செயல் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார்.

நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தேசிய சட்ட வாரியத்தை (என்சிஎல்டி) அணுகிய மிஸ்திரிக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. அவரது மனு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை இம்மாதம் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

பதவி நீக்கத்திற்குப் பிறகு டாடா குழுமத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி மும்பை உயர் நீதிமன்றத்திலும், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்திலும் 2016-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மிஸ்திரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிக பங்குகளை தங்கள் குடும்பம் வைத்துள்ள நிலையில் தன்னை நீக்கியது செல்லாது என அவர் கூறியிருந்தார்.

அதில், கம்பெனிகள் சட்டப்படி தன்னை பதவி நீக்கவில்லை என்று மிஸ்திரி குற்றம் சாட்டியிருந்தார். சந்திரசேகரனின் நியமனம் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த தீர்ப்பாயம், சைரஸ் மிஸ்திரியை மீண்டும் செயல் தலைவர் பதவியில் மீண்டும் அமர்த்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தநிலையில் தனது எதிர்கால திட்டம் குறித்து மிஸ்திரி இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘எனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தேன். அதனால் அதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். அதனை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. மற்றபடி டாடா நிறுவன பதவியில் மீண்டும் அமரும் எண்ணம் இல்லை.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x