Published : 31 Dec 2019 08:48 AM
Last Updated : 31 Dec 2019 08:48 AM

நிதி ஆயோக்கின் மாநிலங்கள் வளர்ச்சி அட்டவணை வெளியீடு: முதலிடத்தில் கேரளம், நான்காமிடத்தில் தமிழகம்

டெல்லியில் எஸ்டிஜி அட்டவணையை வெளியிட்டு உரையாற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார். உடன் ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைப்பாளர் ரெனடா டெஸாலியன் (இடது), நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த்.

புதுடெல்லி


மாநிலங்களில் அதிக வளர்ச்சியை எட்டுவதில் கேரளம் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல மிக மோசமான மாநிலமாகபிகார் அடையாளம் காணப்பட்டுள்ளது. நிதி ஆயோக் வெளியிட்ட எஸ்டிஜி இந்தியா குறியீடு 2019-ல் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சி விகிதம்குறித்த விவரங்கள் வெளியிடப்பட் டுள்ளன.

உத்தரப் பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மிகச்சிறந்த முன்னேற்றம் எட்டப்பட் டுள்ளதாகவும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குஜராத் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

கேரள மாநிலம் 70 புள்ளிகளுடன் முதலிடத்திலும், யூனியன் பிரதேசங்களில் சண்டீகர் 70 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளன.

இமாசலப் பிரதேசம் 2-ம் இடத்திலும், ஆந்திரா 3-ம் இடத்திலும், தமிழ்நாடு 4-ம் இடத்திலும் உள்ளன. பிகார், ஜார்க்கண்ட், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மிக மோசமான சூழல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்திர மேம்பாட்டு இலக்கு (எஸ்டிஜி) ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களின் செயல்பாடு மதிப்பிடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை 2030-ம்ஆண்டுக்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. இதில் இந்தியாவை தவிர்த்து இலக்கை எட்ட முடியாது என்ற சூழல் உள்ளது. இதனால் மாநிலங்கள் அனைத்தும் எஸ்டிஜி இலக்கை ஆண்டுதோறும் ஆய்வுசெய்து அட்டவணை வெளியிடுகிறது நிதி ஆயோக்.

ஐக்கிய நாடுகள் சபையின் எஸ்டிஜி இலக்கை எட்டுவதில் தீவிரமாக உள்ளதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார். குறிப்பாக சுகாதார மேம்பாடுகளில் இம்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாக அவர்கூறினார். ஐக்கிய நாடுகள் சபைவரையறுத்துள்ள அளவீடுகளின்படி ஒட்டுமொத்த இந்தியாவுக்கான புள்ளிகள் 2018-ம் ஆண்டில் 57 ஆகஇருந்தது. அது 2019-ல் 60 ஆகஉயர்ந்துள்ளது. சுகாதாரம், நீர்வளம், மின்சாரம், தொழில் பெருக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் புள்ளிகள் அதிகரித்துள்ளது.

இருப்பினும் ஊட்டச் சத்து குறைபாடு, பாலின பாகுபாடு ஆகியன இந்தியாவின் மதிப்பை குறைப்பவையாக உள்ளன. இவ்விரு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் நிர்ணயிக்கப்பட்ட 12 இனங்களில் முதல் 5 இடங்களில் உள்ள மாநிலங்கள் மிகச் சிறப்பாகவே செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்புநடவடிக்கையில் தமிழ்நாடு, திரிபுரா, ஆந்திரா, மேகாலயா, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாக எஸ்டிஜி அறிக்கை தெரிவிக்கிறது.

பசிக் கொடுமை இல்லாத மாநிலங்கள் பட்டியலில் கோவா, மிஜோரம், கேரளா, நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் உள்ளதாக தெரிகிறது.

2018-ம் ஆண்டிலிருந்து எஸ்டிஜி அட்டவணையை ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கு அடிப்படையில் நிதி ஆயோக் தயாரித்து வெளியிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x