Published : 08 Dec 2019 07:13 PM
Last Updated : 08 Dec 2019 07:13 PM
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் சாகுபடியாகியுள்ள வெங்காயம் இந்த மாத இறுதியில் சந்தைக்கு வந்து விடும் என்பதால் ஜனவரியில் விலை கணிசமாக குறையும் எனத தெரிகிறது.
வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மகாராஷ்டிராவில் பருவம் தவறி மழை பெய்தது. அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் மழை கொட்டித் தீர்த்தது.
பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்தது.
நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டன.
வெங்காயத்தின் விலை சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கிலோ 150 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. வெங்காயம் விலை குறையாமல் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஒரு கிலோ வெங்காயம் விற்கப்படுகிறது.
வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்ட வெங்காயம் இன்னமும் வந்து சேரவில்லை.
இந்தநிலையில் ஜனவரியில் வெங்காயம் விலை கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வெங்காய விற்பனை சங்கம் கூறியுள்ளதாவது:
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் சாகுபடியாகியுள்ள வெங்காயம் இந்த மாத இறுதியில் சந்தைக்கு வந்து விடும். இன்னும் சில நாட்களில் அறுவை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். அதுபோலவே இறக்குமதி செய்ய நிறுவனங்களும் ஜனவரிக்குள் வெங்காயத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பதால் ஜனவரியில் வெங்காய விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.’’என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT