Published : 08 Dec 2019 02:44 PM
Last Updated : 08 Dec 2019 02:44 PM

இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை விட குறையும்: சந்தை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை

மும்பை

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை கூட எட்டுவது கடினம் தான் என சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ தெரிவித்துள்ளது.

இந்தியா தற்போது பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மக்களின் நுகர்வுத் திறன் குறைந்து இருப்பதால், உற்பத்தியும் குறைந்து உள்ளது. இதனால் உற்பத்தி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. வேலை இல்லா திண்டாட்டமும் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்து உள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் 5 சதவீதமாக குறைந்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சரி செய்ய மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்து வருகிறது.

இருந்தபோதிலும், இந்தியாவின் பொருளாதார நிலை முன்பிருந்ததைவிட மோசமடைந்து இருப்பதாக மூடி’ஸ் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டு புள்ளி விவரங்கள் வெளியாகின. அதில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத கடும் வீழ்ச்சி.2-வது காலாண்டிற்கான ஜிடிபி 4.5 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே 2-வது காலாண்டில் ஜிடிபி 6.9% ஆக இருந்தது.

விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாகும்.

8 முக்கிய ஆதார தொழிற்துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. முக்கியமாக எரிபொருள் உற்பத்தி துறையில் அதிக சரிவு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதம் 17.6% குறைந்துள்ளது.

அதேபோல் கச்சா எண்ணெய் துறையில் 5.1% வளர்ச்சி குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு துறையில் 5.7% வளர்ச்சி குறைந்துள்ளது. இது போல சிமெண்ட் உற்பத்தில் 7.7% குறைந்துள்ளது. இரும்பு உற்பத்தில் 1.6% குறைந்துள்ளது. கடைசியாக 2012-13 ஜனவரி மார்ச் காலாண்டில் 4.3% ஆக ஜிடிபி இருந்தது.

இந்தநிலையில் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை கூட எட்டுவது கடினம் தான் என சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது:

‘‘முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. தொழில்துறையில் தொடர்ந்து தேக்கநிலை காணப்படுகிறது. வங்கிகளின் வாராக்கடன் காரணமாக கடன் வழங்குவதை குறைத்துள்ளதால் நிதி சுழற்சி ஏற்படவில்லை. தொழில் செய்ய பணம் இல்லாமல் சிறு வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றன்றனர்.

பொருளாதார சுழற்சிக்காக வங்கி கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளபோதிலும் அதன் பயன் தொழில்துறைக்கு சென்று சேரவில்லை. இதனால் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை கூட எட்டுவது கடினம் தான்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x