Published : 19 Nov 2019 02:38 PM
Last Updated : 19 Nov 2019 02:38 PM

டிசம்பர் முதல் கட்டண உயர்வு: வோடோபோன் ஐடியா, ஏர்டெல் முடிவு

புதுடெல்லி

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடோபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மொபைல் போன் சேவை கட்டணத்தை டிசம்பரில் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளன.

நாடுமுழுவதும் மொபைல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு மொபைல் இணையதள பயன்பாடு பெரியளவில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஜியோ நிறுவனம் அதிகப்‌படியான வா‌டிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

இந்த தொழில் போட்டியால் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மட்டுமின்றி ஏர்டெல், வோடோபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் கடும் போட்டியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐடியா நிறுவனம் நிதி சிக்கலை சந்தித்து வருவதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் ஜியோ நிறுவனம் அழைப்புக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச சேவையை நிறுத்தி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளன.

டிசம்பர் 1-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என வோடோபோன் ஐடியா தெரிவித்துள்ளது. ‘‘வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களை வழங்க சேவை கட்டணங்களை டிசம்பர் 1-ம் தேதி முதல் உயர்த்தவுள்ளோம். அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய சேவைகள் தொடங்கி 30 கோடி வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து முதலீடு செய்வோம்.’’ என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோலவே டிசம்பரில் கட்டணத்தை உயர்த்தப்போவதாக ஏர்டெல் நிறுவனமும் தெரிவித்துள்ளது. இரு நிறுவனங்களும் எவ்வளவு கடடணம் உயரும், எந்தெந்த சேவைகளுக்கு கட்டணம் உயரும் என்ற விவரங்களை வெளியிடவில்லை. தொலைத்தொடர்புத் துறையில் அந்த நிறுவனங்கள் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக கட்டணங்களை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x