Published : 13 Nov 2019 11:03 AM
Last Updated : 13 Nov 2019 11:03 AM
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் உருவாக்கத்தில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், 2022-ம் ஆண்டில் 200 ஜிகா வாட்ஸ் அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான கட்டமைப்பை இந்தியா கொண்டிருக்கும் என்று எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ‘2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட்ஸ் அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலுக்கான கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் தற்போதைய நிலையில் நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாகவே அடைவோம்’ என்று தெரிவித்தார்.
இதுவரை 83 ஜிகா வாட்ஸ் அளவில் புதிப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலுக்கான கட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். 31 ஜிகா வாட்ஸ் கட்டமைப்பு பணிகளில் இருந்து வருகிறது. தவிர, 35 ஜிகா வாட்ஸ் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது. ஹைட்ரோ எனர்ஜி பிரிவில் 45 ஜிகா வாட்ஸுக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. 13 ஜிகா வாட்ஸ் உருவாக்கப் பணிகளில் இருந்து வருகிறது. இவை மொத்தமாக 2022-ம் ஆண்டில் 200 ஜிகா வாட்ஸை தாண்டும் என்று அவர் தெரிவித்தார்.
2030-ம் ஆண்டில் இந்தியாவில் 450 ஜிகா வாட்ஸ் அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலுக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகளின் பருவநிலை தொடர்பான மாநாட்டில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பிரதமரின் இலக்கை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருவதாக ஆர்.கே. சிங் தெரிவித்தார். 2030-ம் ஆண்டில் இந்தியாவில் 55 சதவீதம் அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திஆற்றல் பயன்பாடு இருக்கும் என்று தெரிவித்தார்.
எரிபொருள் நுகர்வை குறைக்க மத்திய அரசு பிஏடி என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதுகுறித்து அவர் கூறியபோது, ‘பிஏடி திட்டத்தினபடி, 2012-13 முதல் 2014-15 வரையிலான அதன் முதல் சுற்றில் 8.6 மில்லியன் டன் அளவில் எண்ணெய் நுகர்வு குறைக்கப்பட்டு உள்ளது. 2016-17 முதல் 2018-19 வரையிலான அதன் இரண்டாம் சுற்றில் ஆண்டுக்கு 3 மில்லியன் டன் அளவில் எண்ணெய் நுகர்வு குறைந்துள்ளது’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT