Published : 26 Dec 2013 10:40 AM
Last Updated : 26 Dec 2013 10:40 AM
இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை 1990-களின் பிற்பாதியில் பின்பற்றப்பட்டாலும், அதை பரவலாக தாராளமயமாக்கியது 2013-ம் ஆண்டில்தான். இதனாலேயே பல அன்னிய நிறுவனங்கள் இந்தியாவிற்குள் குவிந்தன.
இங்கிலாந்தின் மிகப் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனம் டெஸ்கோ, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எதியாட் ஏர்லைன்ஸ் என பல நிறுவனங்கள் இந்தியாவினுள் நுழைந்துள்ளன. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அன்னிய நேரடி முதலீடுகளுக்கான (எப்டிஐ) பல்வேறு துறைகளில் அதாவது தொலைத் தொடர்பு, பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு, வேளாண் பொருள் வர்த்தக சந்தை, மின் சக்தி மற்றும் பங்குச் சந்தைகளில் அன்னிய நேரடி முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
இதன் விளைவாக ஆண்டு இறுதியில் டெஸ்கோ நிறுவனம் 11 கோடி டாலர் முதலீட்டுடன் டாடா குழுமத்தின் டிரென்டுடன் இணைந்து சூப்பர் மார்கெட் அமைக்க முடிவு செய்துள்ளது. மற்றொரு ஐரோப்பிய நிறுவனமும் இந்தியாவில் நுழைய காத்திருப்பதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
விமான போக்குவரத்துத் துறையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா ஆகிய நிறுவனங்கள் டாடா குழுமத்துடன் இணைந்து இந்திய வானில் பறக்க உள்ளன. அபுதாபியைச் சேர்ந்த எதியாட் ஏர்லைன்ஸ் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை வாங்கி இந்திய வானில் தனது எல்லையை விஸ்தரித்துக் கொண்டுள்ளது.
இந்நிறுவனம் ரூ. 2,000 கோடி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரயில்வே மற்றும் கட்டுமானத் துறையில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். சில்லறை வர்த்தகத்தில் மின்னணு வர்த்தக முறையில் அன்னிய நிறுவனங்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசிக்க தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு வாரியம் (டிஐபிபி) முடிவு செய்துள்ளது.
2013-ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலத்தில் இந்தியாவில் செய்யப்பட்ட நேரடி அன்னிய முதலீடு 1,685 கோடி டாலராகும். 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அதாவது 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை கட்டுமானம், துறைமுகம், விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் ஒரு லட்சம் கோடி டாலர் தேவைப்படுவதாக கணித்துள்ளது.
அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்தியபோதிலும் அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்துள்ளன. எனவே அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகே அதிக அளவில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக பொறுப்பேற்கும் அரசு உடனடியாக தாரளமயக் கொள்கைகளை விரைவுபடுத்தினால் மேலும் முதலீடுகள் குவியும் என்று சட்ட ஆலோசனை நிறுவனமான அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷண் மல்ஹோத்ரா கூறினார். நிதி நெருக்கடியில் தவிக்கும் ரயில்வேத் துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சில பரிந்துரைகளை டிஐபிபி வகுத்து வருகிறது. ஏற்கெனவே உள்ள ரயில்வே துறையில் தேங்கிக் கிடக்கும் திட்டப் பணிகளை தொடர அன்னிய முதலீடு தேவைப்படுகிறது. இப்போது ரயில்வேத் துறையில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.
ஒருபக்கம் தாராளமய பரிந்துரைகளை டிஐபிபி அறிவித்துள்ள போதிலும் பார்மா துறை மற்றும் ராயல்டி அளிப்பதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பார்மசூடிக்கல்ஸ் துறையில், அன்னிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை அதிக அளவில் வாங்குவதைக் கட்டுப்படுத்துவதற்காக சில கடுமையான விதிகளை பரிந்துரைத்துள்ளது. அன்னிய நிறுவனங்கள் அதிக அளவில் இந்திய நிறுவனங்களை வாங்கினால் இந்தியாவில் மருந்துப் பொருள்களின் விலை வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து போகும் என்று குறிப்பிட்டது. ஆனால் இந்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை நிராகரித்துவிட்டது.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் பிரேஸில், சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. என்று இ அண்ட் ஒய் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உரிய சூழல் நிலவவில்லை என்று ஃபிக்கி தலைவர் சித்தார்த் பிர்லா குறிப்பிட்டுள்ளார். பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
2012-ம் ஆண்டில் சர்வதேச அளவில் நிலவிய பொருளாதார தேக்க நிலை காரணமாக தாராளமய கொள்கையை மேலும் தளர்த்தியது இந்திய அரசு. 2013-ல் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, கமாடிட்டி எக்சேஞ்ச், பவர் எக்சேஞ்ச், ஒளிபரப்பு, வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், சொத்து சீரமைப்பு நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT