Published : 08 Nov 2013 12:00 AM
Last Updated : 08 Nov 2013 12:00 AM
மத்தியில் பொறுப்பேற்கும் புதிய அரசுக்கு தரச்சான்று நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சி சூழலை மாற்றுவதற்கான நடவடிக்கையை பொறுப்பேற்கும் புதிய அரசு எடுக்கத் தவறினால் அடுத்த ஆண்டுக்கான இந்தியாவின் கடனை திரும்ப செலுத்தும் திறன் குறித்த மதிப்பீடு மேலும் குறையும் என இந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி குறித்து மதிப்பீடு செய்துள்ளோம். மிகவும் சிக்கலான அரசின் கடன் சுமை, அதை திரும்பச் செலுத்துவதற்காக புதிய அரசிடம் உள்ள பொருளாதார கொள்கை ஆகியவற்றைப் பொறுத்தே மதிப்பீடு அமையும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவின் கடனை திரும்ப செலுத்தும் திறன் குறித்த மதிப்பீட்டை வெளியிடுவோம் என எஸ் அண்ட் பி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவு நிலையிலேயே உள்ளது. இதனால் யூக அடிப்படையில் இந்தியாவின் பொருளாதார நிலையை குறைத்து மதிப்பீடு செய்துள்ளோம் என்ற எண்ணம் உருவாகும். எனவேதான் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு மதிப்பீடை வெளியிட உள்ளோம். மேலும் பொதுத் தேர்தல் மட்டுமே இந்தியாவின் பொருளாதார சரிவை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்று விடாது என்பது எங்களுக்குப் புரிகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றும் விதமாக அமைவதுதான் பொதுத் தேர்தல். பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு மே 14-ம்தேதிக்குள் நடத்தப்பட வேண்டும். இப்போது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறதா அல்லது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப் போகிறதா என்பதுதான் பிரதான கேள்வி. எப்படியிருப்பினும் புதிய அரசுக்கு பன்முக சவால்கள் காத்திருக்கின்றன என்று எஸ் அண்ட் பி தெரிவித்துள்ளது.
இப்போது நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் அன்னியச் செலாவணி கையிருப்பு ஆகியவற்றைப் பொறுத்து முதலீடுகள் வரப்பெறுகின்றன. இவை தொடர்வதற்கு உரிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். மேலும் அரசின் நிதிக் கொள்கை, நிர்வாகம், அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தத்தில் காணப்படும் மெதுவான முன்னேற்றம், அடிப்படை வசதி ஆகியவற்றைக் கொண்டு மதிப்பீடு செய்யும்போது தனி நபர் பங்களிப்பு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1,500 டாலராக உள்ளதாக எஸ் அண்ட் பி தெரிவித்துள்ளது.
2014-ம் நிதிஆண்டில் அரசின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாகக் குறைக்க முடியும் என்ற இலக்கை எட்டுவது என்பது பொதுத் தேர்தலுக்கு ஆகும் செலவைப் பொறுத்தது என்றும் எஸ் அண்ட் பி தெரிவித்துள்ளது. அரசின் பட்ஜெட் செலவின ஒதுக்கீட்டில் மிச்சமுள்ளதைப் பார்த்தாலே இந்தியாவின் நிதிக் கட்டுப்பாடு நிலவரம் புரியும்.
அரசு செலவினங்களை பரந்துபட்டு கணக்கிடும்போது அரசின் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடுவதாக எஸ் அண்ட் பி தெரிவித்துள்ளது. இத்துடன் எண்ணெய் நிறுவனங்களின் கடன் சுமை மற்றும் மாநில மின்வாரியங்களின் நிதிச் சுமை ஆகியவற்றின் பங்களிப்பு மேலும் ஒரு சதவீதம் முதல் இரண்டு சதவீதம் வரை அதிகரிக்க வகை செய்யும் என்று எஸ் அண்ட் பி குறிப்பிட்டுள்ளது.
மானியம் குறித்து மத்திய அரசு வெளியிட்டு வரும் தகவல்கள் ஆதரவையும்,எதிர்ப்பையும் பெற்று வருகின்றன. இதில் சாதகமான ஒரு அம்சம் டீசல் மீதான விலைக் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்க முடிவு செய்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை படிப்படியாக உயர்த்திக் கொள்ள அனுமதிப்பதென அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் டீசலுக்கு அளிக்கப்படும் மானியத்தை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்று எஸ் அண்ட் பி தெரிவித்தள்ளது.
இருப்பனும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அரசு எதிர்பார்ப்பதைவிட அதிகமாக உள்ளது. இருப்பினும் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வருவதால் டீசலுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை முழுமையாக ரத்து செய்வது தாமதமாகிறது.
இதில் மற்றொரு பாதக அம்சம் என்னவெனில் உணவு பாதுகாப்பு மசோதாவை அரசு நிறைவேற்றியுள்ளது. இதனால் உணவுக்கான மானிய ஒதுக்கீடு அதிகரிக்கும். ஏற்கெனவே அரசு உணவுக்கு அளித்து வரும் மானிய ஒதுக்கீட்டைக் காட்டிலும் இரு மடங்காக ஒதுக்க வேண்டியிருக்கும். இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதமாக உள்ளது என்றும் எஸ் அண்ட் பி சுட்டிக் காட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT