Published : 28 Oct 2013 04:50 PM
Last Updated : 28 Oct 2013 04:50 PM
சி.கே. பிரகலாத். உலகம் அறிந்த கோயமுத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத் “மைய போட்டித்திறன்” (Core Competence) என்ற நிர்வாக கருத்தின் தந்தை. சந்தை போட்டியில் ஜெயிக்க உங்கள் நிறுவனத்திற்கென்று உள்ள தனித்திறன்களை மட்டும் நம்புங்கள் என்று சொல்லி பல நிறுவனங்களை காப்பாற்றியவர்.
மிஷிகன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து உலகின் தலை சிறந்த நிர்வாக ஆசிரியர் என பெயர் பெற்றவர். 2009ல் அமெரிக்க வாழ் இந்தியராக இருந்த இவருக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது அளித்தது. இவர் 2010-ம் ஆண்டு மறைந்தார்.
இவர் எழுதியதில் அதிக விற்பனை ஆகும் புத்தகம் The Fortune at the Bottom of the Pyramid: Eradicating Poverty Through Profits.
உலக நாடுகளில் அதிக மக்கள் வாழ்வது அடித்தட்டுகளில் தான். சுமார் 400 கோடி மக்கள் 2 டாலருக்கு (சுமார் ரூ 120 ) குறைவான தினசரி வருமானத்தில் தான் ஜீவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை அரசாங்கங்களும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தனியார்வ தொண்டு நிறுவனங்களும் மட்டும் அக்கறைப்பட்டு வந்த சூழ்நிலையில், தனியார் வியாபார நிறுவனங்கள் இந்த அடுக்கில் இருக்கும் மக்களை கவனிக்கலாம். சந்தைப்படுத்தலாம். வியாபாரமும் பெருகும். வறுமையும் ஒழியும் என்று இந்த புத்தகத்தில் கூறுகிறார் சி.கே.பிரகலாத்.
புத்தகம் புதிதாக வெளிவந்த காலத்தில் அதை அவசரமாக வாசித்த காலத்திலும், பின்னர் சென்னை புத்தக கண்காட்சியில் அவர் பேச்சை கேட்ட பொழுதிலும் நான் கிட்டத்திட்ட இந்த புத்தகம் பற்றிய பித்த நிலையில் இருந்தேன் என்பதுதான் நிஜம். “இவர்கள் ஏழைகள்; இவர்களிடம் வாங்கும் திறன் இல்லை” என்று எண்ணுவது பேதமை. அவர்கள் நுகரும் அளவில், குறைந்த விலையில், நூதனமாக கொண்டு சென்று கொடுத்தால் அங்கு பெரிய சந்தை உள்ளது. தரம் குறைந்த பொருட்களையும் சேவைகளையும் அனுபவித்து வரும் அடிமட்ட மக்களும் இதனால் பொருளாதார வளர்ச்சி பெறுவார்கள் என்கிறார்.
ஹிந்துஸ்தான் லீவரின் “ரின் ஷக்தி”, “சன் சில்க்” சாஷே, அரவிந்த் கண் மருத்துவமனையின் உலகத் தர, மிக குறைந்த விலை கண் சிகிச்சை, ஜெய்பூர் கம்பிளிகள் என உள்ளூர் நிலவரங்களை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய சந்தைகளை அலசுகிறது புத்தகம். இந்தியா மட்டும் இல்லாமல் பெரு, பிரேசில், மெக்சிகோ மற்றும் வெனிசுலா நாடுகளிலிருந்தும் உதாரணங்கள் தருகிறார்.
வறுமையை ஒழிக்கலாம் என்று ஒரு நிர்வாக மேதை சொன்னது, நம் நாட்டு வெற்றிக்கதைகளை எழுதியது, உலகம் முழுவதும் இது போன்ற கதைகள் உள்ளது எனக் காட்டியது, வணிகமும் சமூக நலமும் ஒரு கோட்டில் சேர்கிறது என்று புரட்சியாய் பறை சாற்றியது அனைத்தும் எனக்கு பிடித்தது.
இதை முன்னர் விமர்சித்த காலங்களில் மிகவும் பாராட்டியே எழுதியும் பேசியும் வந்துள்ளேன். ஆனால் இந்த மதிப்புரை எழுத மீண்டும் படித்த போது பல புதிய கேள்விகள் எழுந்தன.
கர்ணன் படத்தை சிறுவனாக முழுவதுமாய் அனுபவித்து ரசித்தேன். இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் அகண்ட திரையில் பார்த்த போது பல காட்சிகள் ரசித்தேன். பல காட்சிகள் கண்ணை உறுத்தின. மாறியது நான் தான். அது போலத்தான் ஆனது இந்த மதிப்புரையும்.
தவிர புத்தகம் பற்றி எழுந்த பல சர்ச்சைகளை படித்த போது அவற்றுள் பல கேள்விகள் நியாயமாக படுகிறது.
அவற்றுள் சில...
இது புதிய கருத்தாக்கமே அல்ல. அமுல் ஏற்கனவே அடித்தட்டு மக்களை இணைத்து தான் தோன்றியது. அவர்களையே அது முழுவதும் பலனளிக்கவும் செய்தது. ஹிந்துஸ்தான் லீவர் நிர்மாவின் வளர்ச்சியை தடுக்கத் தான் குறைந்த விலை சந்தைக்குள் “வீல் வீல்” என கத்திக்கொண்டு உள்ளே வந்தது. (Wheel சார்!). இது ஒரு தற்காலிக செயல்பாடு தான். இது போன்ற சந்தைகளிலிருந்து ஹெச். எல்.எல். பல முறை வெளியே வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
சாஷே புரட்சியை மையமாக வைத்து தான் ஷாம்பூ, பிஸ்கட், பற்பசை, தேங்காய் எண்ணெய் எல்லாம் குறைந்த விலையில் & அளவில் வினியோகிக்கலாம் என்று கூறுகிறார். இவற்றால் ஏற்படும் சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்பும் அடித்தட்டு மக்களை தான் அதிகம் பாதிக்கும் என்பதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை?
தவிர, சாஷேவை முதன் முதலில் அறிமுகம் செய்த வெல்வெட் பற்றியோ, “சிக்” மூலம் ஹெச். எல். எல்லை இந்த சந்தைக்குள் சிக்க வைத்த கவின் கேர் பற்றியோ எந்த குறிப்பும் இல்லையே ஏன்?
பத்து வருடத்திற்கு முன் BOP (Bottom of Pyramid) சந்தையில் நுழைந்தவர்கள் ஏன் பலர் இன்று தங்கள் இருப்பை அங்கு தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஏன்?
இவை அனைத்தையும் விட எனக்கு தோன்றிய கேள்வி: அடி மட்ட மக்களை உற்பத்தியாளர்களாக வைத்திருப்பதை விட்டு நுகர்வோர்களாக மாற்றுவது எப்படி அவர்கள் வறுமையை விரட்டும்?
இந்த சந்தை வடிவம் வறுமையை ஒழிக்கும் என்பது என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா பாஷையில் சொன்னால் “உட்டாலக்கடி!”
ஆனால் அடிமட்ட சந்தை ஒன்று உள்ளது என்பது நிஜம். அதை பல பெரிய வணிக நிறுவனங்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை என்பது நிஜம். பெரிதாக ஜெயிக்க இந்த சந்தை அறிதல் மிக முக்கியம் என்பது சத்தியம்.
எல்லா காலங்களிலும் அடிமட்ட சந்தையை புரிந்தவர்கள் ஜெயித்திருக்கிறார்கள். 1967 ல் தமிழ் நாட்டில் காங்கிரஸ் தோற்றது இதை புரிந்து கொள்ள முயலாததனால் தான். அறிஞர் அண்ணா அரியணை ஏறியேறியதும் அதனால்தான். பெரிய கம்பனி படங்கள் தோற்றாலும் ராம நாராயணன் படங்கள் ஜெயிப்பது அதனால் தான்! இன்றைய தொழில் சூழ்நிலையில் சில்லறை தொழில், வர்த்தகம், சேவைத் துறை, கல்வி, மருத்துவம் என அனைத்தையும் பிழைக்க வைப்பது BOP தான்!
பெரிய ஓட்டலில் ஆட்கள் இல்லை. சின்ன கடைகளில் கூட்டம் குறையவில்லை. பல பெரிய பிராண்டுகள் திறந்தும் மூடியும் உள்ள நிலையில் சில சின்ன கடைகளில் அதே விஸ்வாசமான வாடிக்கையாளர்களுடன் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டு கோலா பானங்களை விட நம்ம ஊரு போவன்டோ இன்னமும் சின்ன ஊர்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
உங்கள் வியாபாரத்தை அடிமட்ட ஏழை மக்களின் சந்தையில் தேடினால் சில காலம் பிழைக்கும். ஆனால் அதே ஏழை மக்கள் உங்களை தேடினால் பல்லாண்டு தழைக்கும்.
என் பிரிய உதாரணங்கள் வங்க தேசத்தைச் சேர்ந்த கிராமீன் வங்கி மற்றும் ஸ்ரீ மகிளா கிரஹ உத்யோக் லிஜ்ஜட் பப்பட்.
20 லட்சம் பிரதிகள் விற்றுப்போன இந்த புத்தகம் வணிகம் சார்ந்த அனைவரும் அவசியம் படிக்க வேண்டியதே!
டாக்டர். ஆர்.கார்த்திகேயன் – தொடர்புக்கு: Gemba@karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT