Published : 14 Oct 2013 12:36 PM
Last Updated : 14 Oct 2013 12:36 PM

பணவீக்கம் 6.46% ஆக அதிகரிப்பு

இந்தியாவின் ஒட்டுமொத்த பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 6.4 சதவீதமாக அதிகரித்தது.

காய்கறிகள் குறிப்பாக வெங்காயத்தின் விலை உயர்வே பணவீக்கம் அதிகரிக்க பிரதான காரணமாகும். கடந்த 7 மாதங்களில் பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும். முந்தைய மாதத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது.

செப்டம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 6 சதவீத அளவுக்கு இருக்கும் என்ற பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும் தாண்டி இப்போது 6.4 சதவீத அளவை எட்டியுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதத்தில் வெங்காயத்தின் விலை 322 சதவீதம் உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 244 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதத்தில் உணவுப் பணவீக்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவாக 18.4 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்தது. முந்தைய மாதத்தில் உணவுப் பணவீக்கம் 18.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஆண்டில் பணவீக்க விகிதம் 5.64 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டது. முந்தைய ஆண்டு இதே கால பணவீக்கம் 4.84 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு மொத்த விலை குறியீட்டு எண் 6.13 சதவிகிதமாகும். ஆனால் முதல் காலாண்டில் 4.83 சதவிகிதம் மட்டுமே.

பணவீக்கம் அதிகரித்திருக்கும் இந்த சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை வந்த தொழில் உற்பத்தி குறியீடும் (ஐ.ஐ.பி.)யும் சரிந்தது குறிப்பிடதக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x