Published : 17 Jan 2014 11:49 AM
Last Updated : 17 Jan 2014 11:49 AM

கச்சா சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி

கச்சா சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு 40 லட்சம் டன் கச்சா சர்க்கரையை ஏற்றுமதி செய்ய ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சர்க்கரை ஆலைகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய பிரதமர் மன்மோகன் சிங் ஒரு குழுவை அமைத்தார். இக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஏற்கெனவே சர்க்கரை ஆலைகளுக்கு வங்கிக் கடன் வட்டியில் மானியம் அளிக்கப்பட்டது. இந்த மானியத்தை கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை அளிக்கப்பட்டது.

அத்துடன் இப்போது கச்சா சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு கரும்பு அறவை சீசனில் 40 லட்சம் டன் கச்சா சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் கூறினார்.

நிதி அமைச்சகத்தின் அனுமதியோடு எவ்வளவு மானியம் அளிப்பது என்பது விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். மானியம் குறித்த முடிவு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். சர்வதேச வர்த்தக அமைப்பு (டபிள்யுடிஓ) வகுத்தளித்த மானிய விதிகளுக்கு உள்பட்டு ஆலைகளுக்கான மானியம் அளிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு டன்னுக்கு எவ்வளவு மானியம் அளிப்பது என்பது முடிவு செய்யப்பட்டு அது உணவு அமைச்சகம் வசம் உள்ள சர்க்கரை மேம்பாட்டு நிதியத்திலிருந்து அளிக்கப்படும் என்று கூறினார். மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கச்சா சர்க்கரைக்கு ஒரு டன்னுக்கு ரூ. 2,390 அளிக்கலாம் என உணவு அமைச்சகம் தீர்மானித்துள்ளது. ஆனால் ஒரு டன்னுக்கு ரூ. 3,500 மானியமாக வழங்க வேண்டும் என்று இந்திய சர்க்கரை ஆலை அதிபர்கள் சங்கம் வற்புறுத்தி வருகிறது. கச்சா சர்க்கரை ஏற்றுமதி செய்வதால் ஒரு டன்னுக்கு ரூ. 4,500 இழப்பு ஏற்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா சர்க்கரை ஒரு டன் ரூ. 22,500 விலையில் விற்பனையாகிறது. ஆனால் உற்பத்தி செலவு ரூ. 26,500 ஆக உள்ளது என்று சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச விலை நிலவரத்தின்படி டன்னுக்கு ரூ. 3,500 வழங்காமல் ஏற்றுமதி செய்வது சாத்தியமில்லை என்று சங்கத்தினர் தெரிவித்துள்ளன. சர்க்கரை உபரியாகக் கிடைப்பதால் விலை சரிந்துள்ளது. இதனால் உற்பத்தி செலவை விட குறைவான விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு அதிக அளவில் நிலுவைத் தொகை அளிக்க வேண்டியுல்ளது.

கரும்பு ஆலைகளுக்கு டன்னுக்கு ரூ. 2,390 அளிப்பதால் அரசுக்கு இரண்டு ஆண்டுகளில் ரூ. 1,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அளிக்கப் படும் மானியம் ரூ. 3,500 ஆக உயர்த்தப்பட்டால் நஷ்டத்தின் அளவு ரூ. 1,400 கோடியாக உயரும் என தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x