Published : 04 Feb 2014 11:03 AM
Last Updated : 04 Feb 2014 11:03 AM
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு மாடல்களும் இந்த மே மாதம் முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.
ஸெஸ்ட் என்ற பெயரிலான கார் முற்றிலும் செடான் மாடல் காராகும். போல்ட் என்ற பெயரிலான கார் ஹாட்ச்பேக் மாடலாகும். டாடா மோட்டார்ஸின் புதிய ரெவ்டிரான் என்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது.
இவ்விரு தயாரிப்புகளும் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட எக்ஸ் 1 பிளாட்ஃபார்ம் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இதில்தான் ஏற்கெனவே பிரபலமாக உள்ள விஸ்டா, மான்ஸா ஆகிய கார்கள் தயாராகின்றன.
இந்தியா, பிரிட்டன், கொரியா ஆகிய நாடுகளை இலக்காகக் கொண்டு இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன பிரிவின் தலைவர் ரஞ்ஜித் யாதவ் தெரிவித்தார்.
இப்புதிய மாடல் அறிமுகம் மூலம் கார் விற்பனை சந்தையில் டாடா நிறுவனத்தின் சந்தை அளவை அதிகரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இந்தியாவில் இவ்விரு கார்களும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஸெஸ்ட் மாடல் கார்கள் பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும். போல்ட் மாடல் கார்கள் பெட்ரோலில் ஓடக் கூடியவை. இவ்விரு மாடல் கார்களும் நிறுவனத்தின் பூனே ஆலையில் தயாரிக்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT