Published : 27 Nov 2013 10:25 AM
Last Updated : 27 Nov 2013 10:25 AM

மனம் திறந்து பேசுவோம்

“தற்கொலை வரை போயிருக்கிறேன், ஏன் இப்படி இருக்கிறேன் என்று யோசித்து, என்னாலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை தந்தது உங்கள் எழுத்து” என்றது அந்த மின்னஞ்சல். என் மனதை அப்படியே படம் பிடித்துள்ளீர்கள் என்று சுருக்கமாக வந்தன பல கடிதங்கள். தமிழ் கூறும் நல்லுலகில் Introversion பற்றி எழுதியது பலர் வலியை சுட்டிக்காட்டியது தெரிந்தது.

நடிகர்களை விட மற்றவர்களை உதாரணம் காட்டியிருக்கலாம் என்று குட்டினார்கள் சிலர். ஆனால் ரஜினி, ரஹ்மான் அளவிற்கு எனக்குத் தெரிந்தவர்கள் பிரபலமில்லையே? சினிமா பாஷையில் (திரும்பவுமா?) சொன்னால் ரஜினி படம் கட்டுரைக்கு நல்ல “ஓபனிங்” தந்தது என்பது தான் உண்மை!

ஒரு கல்லூரி முதல்வர் கைபேசியில் கதறினார்: “முதலிலேயே பசங்க இண்டர்வியூவில் வாயைத் திறக்க மாட்டேங்கறாங்க. நீங்க என்னன்னா இன்ட்ராவர்ட்டை புரிஞ்சுக்கோங்கன்னு எழுதறீங்க. எத்தனை HR களுக்கு நேரம் இருக்கு சார்? பேசுலேன்னா ஒரேடியா ரிஜக்ட் தான். இதுல நம்ம பசங்களுக்கு இங்கிலீஷ் வேற வராது. முதல்ல எல்லாரும் நல்லா பேச கத்துக்கங்கன்னு எழுதுங்க சார்.”

சில இடங்களில் சரியாக பேச முடியாது போவது எல்லாருக்கும் நடக்கிறது. அது ஏன் என்று இப்பொழுது பார்ப்போம்.

உலக மக்களில் அதிகம் பேருக்கு உள்ள மிகப்பெரிய பயம் எது தெரியுமா? மரணம்? இல்லை, அது இரண்டாவது இடம் தான். முதல் இடம் கூட்டத்திற்கு முன் உரையாற்றுவது. இதில் இன்ட்ராவர்ட், எக்ஸ்ட்ராவர்ட் பேதமெல்லாம் இல்லை.

பெரும்பாலும் சொதப்புகிற இடம், படிக்கும் காலத்தில் வைவா எக்ஸாம். பிறகு வேலைக்கான இண்டர்வியூக்கள். பின்னர் ஆரம்ப கால பிசினஸ் பிரசண்டேஷன்கள்.

சொந்த வாழ்க்கையில் காதல் சொல்லும் தருணம், நம்மை யாரோ சோதனை செய்கிறார்கள்; இதில் தவறிழைத்தால் நம் சுய பிம்பம் உடைந்துவிடும் என்கிற போதுதான் பதற்றம் ஏற்படுகிறது. பதற்றம் ஏற்படுத்தும் பல மாற்றங்கள் உடலுக்குள் நிகழ்ந்தாலும், வெளியே அதிகம் தெரிவது நம் பேச்சில் மட்டும் தான்.

வார்த்தைகள் வெளி வராது இருத்தல், திக்குதல், கோர்வையான பேச்சு தவறுவது, தெரிந்த விஷயம் மறந்து போய் திரு திரு என முழித்தல் ஆகியவை எல்லாம் பதற்றத்தின் வெளிப்பாடு தான். அந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வந்ததும் எல்லா விடைகளும் தெளிவாக நினைவுக்கு வரும். கோர்வையாக சொல்ல வரும். இது எல்லாருக்கும் நடக்கும்.

Performance Anxiety யைக் குறைக்க ஒரே வழி: எது பதற்றம் தருகிறதோ அதைத் தொடர்ந்து செய்வதுதான். இதற்கு மிஞ்சிய உளவியல் உத்தி எதுவும் கிடையாது. நம் கல்வி அமைப்பு ரொம்ப தமாஷானது. பள்ளி காலங்களில் “வாயை மூடு, பேசக்கூடாது, சத்தம் வரக்கூடாது, பேசினால் பனிஷ்மெண்ட்” என்று சொல்லி வளர்த்துவிட்டு, கல்லூரி வந்தவுடன் “எப்படி பேச வைப்பது?” என்று வெளியாட்களை அழைத்து வந்து கருத்தரங்கம் நடத்துகிறார்கள்.

ஒரு கேள்விக்கான விடை எது? புத்தகத்தில் உள்ளதையோ அல்லது ஆசிரியருக்கு தெரிந்ததைதோ சொன்னால் (பெரும்பாலும் இரண்டும் ஒன்று தான், ஹி ஹி!) பையன் தப்பிப்பான். வேறு ஏதாவது சொன்னால் பரிகாசிக்கப்படுவான் அல்லது தண்டிக்கப்படுவான். இதனால் தோல்வி பயத்தை கல்வித் திட்டத்தோடு சேர்ந்து படிக்கிறோம். இந்தத் தாழ்வு மனப்பான்மையை தான் நம் கல்வி முறை இத்தனை காலமாகக் கொண்டாடி வருகிறது. வித்தியாசமாக பதில் சொல்லும் மாணவனை தன் அதிகாரத்திற்கு வந்த அச்சுறுத்தலாக எண்ணுகின்றனர் ஆசிரியர்கள்.

அதே போல இன்னொரு அபத்தம், நன்கு படிக்கும் மாணவனையே வகுப்பு தலைவனாக்குவது. அவன் வேலை யார் பேசினாலும் பெயர் எழுதி டீச்சரிடம் போட்டுக் கொடுப்பது. பாடத்தில் சுமாரான மாணவனோ மாணவியோ வேறு எதற்கும் லாயக்கில்லை என்பதை தொடர்ந்து கல்வி, குடும்பம் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

இவை அனைத்தும் வளர்ந்த காலத்தில் நேர்முகத் தேர்வில் அச்சம் கொள்ள வைக்கின்றன. எதுவும் தெரியவில்லை என்று சொல்லவோ, பதில் கேட்கவோ ஒரு அமெரிக்க மாணவன் தயங்க மாட்டான். இங்கு நம் மக்கள் தெரியவில்லை என்று சொல்ல கூனி குறுகுகிறார்கள்!

இந்தத் தாழ்வு மனப்பான்மையை மேலும் சிக்கல் படுத்துகிறது ஆங்கில பயம். ஜப்பான், கொரியா, சீனா, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் அமெரிக்க நாடுகளில் இல்லாத பாதுகாப்பின்மையும் தாழ்வு மனப்பான்மையும் அவர்களை விட ஆங்கிலம் அதிகம் தெரிந்த நம்மவர்களுக்கு உண்டு.

ஆங்கிலம் அவசியம் தான். கார்பரேட் உலகில் பிழைக்க இன்று அது உலக பொது மொழி ஆனது நிஜம் தான். ஆனால் தாய் மொழியும் சரியாகத் தெரியாமல், பாட அறிவிலும் ஆழமில்லாமல், ஆங்கில பயமும் இருந்தால் அது அடுத்த தலைமுறையைக் கரை சேர்க்காது.

தாய் மொழி அறிவும் தெளிவும் தான் தன்னம்பிக்கையை வளர்க்கும். கல்வி, தொழில் திறன் இருந்தால் எந்த நாட்டிலும் எந்த வேலையையும் செய்யலாம். எந்த மொழியையும் எப்போது வேண்டுமானலும் கற்கலாம். 200 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் அரசை பிரஞ்சு படை வென்றிருந்தால் இன்று பிரஞ்சு படித்துக்கொண்டிருப்போம். சீனர்கள் ஆங்கிலம் தெரியாமலே போடு போடு என்று போட்டுத் தள்ளுகிறார்கள். நாளை நாம் மாண்டரின் கற்றுக்கொள்ளும் நாள் வரலாம்.

இந்தி படிக்காவிட்டால் வேலை கிடைக்காது என்றார்கள் முன்பு. ஆனால் ஐ.டி. புரட்சி சென்னைக்கும் பெங்களூருக்கும் பாலம் போட்டது. இப்போது வடக்கத்தியர்கள் வேலைக்காக இங்கு வருகிறார்கள். அதனால் வேலை நிமித்தமாக எந்த மொழியையும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். சென்னை சென்ட்ரல் போர்டர்கள் சாதாரணமாக ஆறு மொழி பேசுவார்கள். இன்னும் எழுத படிக்கத்தெரியாதவர்கள் அவர்களுள் பலர் உண்டு.

மொழி அறிவை எப்போது வேண்டுமானாலும் சுலபமாக வளர்த்துக் கொள்ளலாம். தன்னம்பிக்கையை வளர்ப்பது கடினம். மாணவர்களை தொடர்ந்து பேச விடுவோம். நேர்காணல் நாள் அத்தனை பதற்றமாக இருக்காது.

இந்தியாவில் ஒவ்வொரு மொழியிலும் மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கென்றே தனி பத்திரிகை கொண்டு வர வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தபோது, இடை மறித்த நண்பர், “என் பையன் கம்பர், ஷேக்ஸ்பியர் இரண்டும் சேர்ந்த கலவை” என்றார். அவ்வளவு மொழி பெயர்ப்பு புலமையா எனக் கேட்டதற்கு, “சே சே! கம்பரோட ஆங்கில அறிவும் ஷேக்ஸ்பியரின் தமிழ் அறிவும் அவனுக்கு உள்ளது” என்றார்.

- gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x