Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM
தொழில் வளர்ச்சிக்கு அரசு மானியத்தை எதிர்பார்க்காமல் சவால்களை சுயமாக எதிர்கொண்டால் மட்டுமே தொழில் நிறுவனங்கள் வெற்றியடைய முடியும் என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி.சக்ரவர்த்தி தெரிவித்தார்.
கோவையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் தொழில்துறையினருடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் சக்ரவர்த்தி பேசியது: மோசமான பொருளாதார சூழ்நிலை காரணமாக வாராக்கடன் மதிப்பு அதிகரித்து வருகிறது. பொருளாதார நிலை சரியாகும் வரை வங்கிகள் கடன் வழங்குவது குறையும். இருந்தபோதும், விவசாயம் போன்ற முக்கிய தொழில்களுக்கு கடன் அளிப்பது உற்பத்தியையும், தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்க உதவும். ஆனால், விவசாயக் கடன் வழங்குவதை குறைக்க முடியாது.
விலையேற்றத்தைக் கட்டுப் படுத்த இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இதன்மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அனைத்து தொழில்கள் தரப்பிலும், மக்களிடத்திலும் அதற்கான நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
வங்கிகளிடம் வாங்கிய கடனை முறையாக செலுத்துவதன் மூலமும், உணவு உற்பத்தியைக் குறைக்கும் ரியல் எஸ்டேட்டில் முதலீட்டைக் குறைப்பதன் மூலமும் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியும். இதற்கு கூட்டுமுயற்சி தேவை.
வங்கிக் கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்துக் கொள்ள தொழில் நிறுவனங்கள் வலியுறுத்துகின்றனர். அவர்கள் சந்திக்கும் பிரச்சினைக்காக வட்டி விகிதங்களை குறைத்தால், வங்கிகள் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்து கொள்வது அந்தந்த நிர்வாகங்களின் கடமை. அதைவிடுத்து, வங்கி வட்டி விகிதத்தை குறைக்கக் கூறுவதும், அரசிடம் மானியத்தை எதிர்பார்ப்பதும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். வங்கிகளும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு எவ்வித வேறுபாடும் காட்டாமல் கடன் வழங்க வேண்டியது அவசியம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT