Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM
ரியல் எஸ்டேட் துறையில் தனியார் துறையின் முதலீடு 26 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் தனியார் துறை முதலீடு ரூ. 4,716 கோடி என குஷ்மேன் அண்ட் வேக்ஃபீல்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் தேக்க நிலை நிலவியபோதிலும் தனியார் துறை முதலீடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குத்தகைக்கு விடப்படும் அலுவலக கட்டடங்களுக்கான வருமானம் அதிகரித்திருப்பதால் தனியார் துறை முதலீடு இத்துறையில் அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. நடப்பு நிதி ஆண்டின் (2013-14) முதல் காலாண்டில் இத்துறையில் செய்யப்பட்ட முதலீடு ரூ. 4,716 கோடியாகும், அதாவது 7.55 கோடி டாலர்.
இது முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் செய்யப்பட்டதைவிட 26 சதவீதம் கூடுதலாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் செய்யப்பட்ட முதலீடு ரூ. 3,750 கோடி டாலராகும். அதாவது 7.04 கோடி டாலராகும். இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி மந்தமாக இருந்தபோதிலும் பிஇ முதலீடு இத்துறையில் அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளும் ஆய்வில் விளக்கப்பட்டுள்ளது.
அதில் மெதுவான ஜிடிபி வளர்ச்சி விகிதம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் நிர்பந்தம், அன்னியச் செலாவணி மதிப்பில் காணப்பட்ட ஸ்திரமற்ற நிலை, பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கம் மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தல் ஆகியன இத்துறை வளர்ச்சியை பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடுகளைப் போல உள்நாட்டு முதலீடும் இத்துறையில் அதிகரித்துள்ளது.
மொத்தம் சேர்ந்துள்ள பிஇ முதலீட்டில் 65 சதவீதம் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மேற்கொள்ளப்பட்டதாகும். மூன்றாம் காலாண்டில் ரூ. 3,078 கோடி அதாவது 49.30 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அலுவலக ரீதியிலான ரியல் எஸ்டேட் முதலீடு இரு மடங்கு அதிகரித்து ரூ. 2,476 கோடியைத் தொட்டுள்ளது. வீடுகளுக்கான முதலீடு 11 சதவீதம் குறைந்து ரூ. 2,240 கோடியாக இருந்தது.
குத்தகைக்கான அலுவலக முதலீடு கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது. 2011-ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் ரூ. 7,667 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் 21 ஆகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் 27 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இருப்பினும் சராசரியாக ஒப்பந்த அளவு 62 சதவீதம் அதிகரித்து ரூ. 225 கோடியைத் தொட்டுள்ளது.
பெங்களூரில் மட்டும்தான் அதிகபட்ச பிஇ முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு செய்யப்பட்ட முதலீட்டுத் தொகை ரூ. 1,979 கோடி. கடந்த ஆண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டைவிட 79 சதவீதம் அதிகமாகும். பரிவர்த்தனை செய்யப்பட்ட பண மதிப்பு அளவு 20 சதவீதம் உயர்ந்து ரூ. 612 கோடியாக இருந்தது. இவை அனைத்தும் வீடுகளில் செய்யப்பட்ட முதலீடாகும். வீடுகள் தவிர, அலுவலகங்களில் செய்யப்பட்ட முதலீடு அதிகம் என சி அண்ட் டபிள்யு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT