Published : 25 Oct 2013 11:44 AM
Last Updated : 25 Oct 2013 11:44 AM
ராணாபிளாசா கட்டடம் இடிந்து விழுந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன. வங்கதேசத் தலைநகர் டாக்கா அருகே ராணா பிளாசா கட்டடம் இடிந்து விழுந்து 1130க்கும் அதிகமான பின்னலாடைத் தொழிலாளர்களை பலிகொண்டதோடு, பலர் பலத்த காயமுற்றபோதுதான் பின்னலாடைத் தொழிலில் வங்கதேசம் எனும் குட்டிநாடு தொழிலாளர்களுக்கு எதிராக நடந்துகொண்ட சர்வாதிகாரப்போக்கு வெளி உலகிற்குத் தெரிந்தது. பின்னலாடைத் தொழிலில் இந்த குட்டி நாட்டின் ஆதிக்க சக்தியும் வெளி உலகிற்குத் தெரியவந்தது.
பின்னலாடைத் தொழிலில் உலகின் முன்னணி நாடுகளான சீனா, இந்தியாவுக்கு இந்த குட்டிநாடுதான் பெரும் சவாலாக இருந்துள்ளது என்பதை அப்போதுதான் உலகம் அறிந்தது. அதற்குக் காரணம், வளரும் நாடான வங்கதேசத்திற்கு அளிக்கப்பட்டிருந்த ஏற்றுமதி வரிச்சலுகை.
ஆனால், ராணாபிளாசாவில் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பார்த்து ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளும் கொந்தளித்தன. அப்போது வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் உடனடியாக அறிக்கை விட்டு வங்கதேசத்திற்கு அதிர்ச்சியளித்தன. தற்போது தங்கள் ஆடை ஏற்றுமதியை மெல்ல மெல்ல வங்கதேசத்திலிருந்து குறைக்கத் தொடங்கிவிட்டன.
‘ஏற்றுமதிக்குப் பின்னால் தொழிலாளர்கள் வாழ்க்கையில் இப்படியொரு கோரமுகம் இருப்பதை சகித்துக்கொள்ள முடியாது. எனவே வங்கதேசத்திலிருந்து இனி ஏற்றுமதி செய்வது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம்’ என பகிரங்கமாக அறிக்கை அளித்தன உலகின் பல நாடுகள். அந்த நாடுகளின் கவனம் தற்போது சீனா மற்றும் இந்தியாவின் மீது மெதுவாகத் திரும்பியுள்ளது.
இதையொட்டி, திருப்பூர் பின்னலாடைத் தொழில் தற்போது மெதுவாக உயரத்தொடங்கி இருப்பதாகச் சொல்கின்றனர் ஏற்றுமதி வர்த்தக நிபுணர்கள்.
திருப்பூரில் கோடைகால ஆடைகளுக்கான சர்வதேச பின்னலாடைக் கண்காட்சி கடந்த அக். 9ம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இக் கண்காட்சியில் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா. ஜப்பான், போலந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து 120 க்கும் மேற்பட்ட பையிங் ஏஜெண்ட்டுகளும், 63 பையர்களும் கலந்து கொண்டனர்.
ரூ.300 கோடி முதல் 400 கோடி வரை ஏற்றுமதி வியாபாரம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு வர்த்தகம் ரூ.200 கோடி.
இது குறித்து விவரிக்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல்: நடப்புக் கணக்கு ஆண்டில், ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை ஆயத்த ஆடை ஏற்றுமதி 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாங்கும் திறன் கூடியுள்ளது. மற்ற நாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் நிறைய வரத் தொடங்கியுள்ளன.
ரூ.8,650 கோடி ஏற்றுமதி
கடந்த 6 மாதத்தில் மட்டும் ரூ. 8,650 கோடி மதிப்புள்ள பின்னலாடை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 29 சதவிகிதம் அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. இது ஒரு பெரிய மறுமலர்ச்சி தான். இந்த ஆண்டு டாலர் மதிப்பில் 20 சதவிகித அளவுக்கு ஏற்றுமதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நாடான வங்கதேசத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பின்மையை பார்த்து பல ஐரோப்பிய நாடுகள் அங்கு வாங்குவதை தவிர்த்து, இங்கு வாங்கத் தொடங்கியுள்ளனர். பெரிய நாடான சீனாவும், ஐடி, இன்ஜினியரிங் துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன. வியட்நாம் மற்றும் கம்போடியாவில் மூலப்பொருட்கள் உற்பத்தி குறைவாக உள்ளது. ஆகவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் பின்னலாடை ஏற்றுமதியில் இந்தியா முக்கிய நாடாக உருவெடுக்கும் என்றார்.
தற்போது, திருப்பூரில் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு வசதிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், பின்னலாடை ஏற்றுமதியில் மீண்டும் பின்னலாடை நகரம் தலையெடுக்கும் காலம் நெருங்கிவருவதற்கான சாதக அறிகுறிகள் தென்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT