Published : 28 Oct 2013 08:33 AM
Last Updated : 28 Oct 2013 08:33 AM

ஆயுத ஏற்றுமதி: இந்தியா தீவிரம்

வெளிநாடுகளிலிருந்து இதுவரை ராணுவத்துக்கு ஆயுதங்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா, இப்போது முதல் முறையாக அதிக அளவில் ஏற்றுமதி செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக தென் கொரியாவில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) தொடங்கும் சர்வதேச ஆயுதக் கண்காட்சியில் இந்தியாவின் தயாரிப்புகள் இடம்பெற உள்ளன. சர்வதேச ஆயுத சந்தையில் இந்தியாவும் சப்ளை செய்யும் நாடாக மாற முடிவு செய்துள்ளது.

தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற உள்ள விமான மற்றும் ஆயுத கண்காட்சி (ஏடிஇஎக்ஸ் 2013) உலக நாடுகளை இழுக்கும் முக்கிய கண்காட்சியாகும்.

ஒவ்வொரு நாடும் தனது ராணுவ பலத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள அதி நவீன ஆயுதங்கள் தயாரிக்கும் நாடுகளுக்கு ஆர்டர்கள் அளிக்கும். ராணுவ தளவாட பொருள்களில் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி ஆகியன கருத்தில் கொள்ளப்பட்டு அந்தந்த நாட்டுக்குத் தேவைப்படும் ஆயுதங்களைத் தேர்ந்தெடுக்கும்.

6 நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சி அக்டோபர் 29-ம் தேதி தொடங்குகிறது. ராணுவ ஆயுதங்கள், அதை எடுத்துச் செல்லும் வாகனங்கள், அதை செலுத்துவதற்குத் தேவையான தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வடிவமைத்துள்ளது.

இந்தக் கண்காட்சியில் ராணுவத்துக்கு சப்ளை செய்யும் டாடா பவர் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளும் இடம்பெறும். தரையிலிருந்து மற்றொரு வான் இலக்கைத் தாக்கி அழிக்கக்கூடிய ஆகாஷ் ஏவுகணை (எஸ்ஏஎம்), இலகு ரக விமானம் தேஜாஸ் (எல்சிஏ), தரையிலிருந்து தரை இலக்கைத் தாக்கி அழிக்கக்கூடிய பிரகதி ஏவுகணை, விமான எச்சரிக்கை கருவி (ஏஇடபிள்யூஎஸ்) மற்றும் போர்க்களத்தில் பயன்படுத்தக் கூடிய ரேடார், எதிரிகளை அடையாளம் காண உதவும் கருவி ஆகியவற்றையும் இந்தியா காட்சிப்படுத்த உள்ளது.

இந்தியாவில் டிஆர்டிஓ தயாரித்த ராணுவ தளவாடப் பொருள்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளதாக டிஆர்டிஓ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகே இந்திய ராணுவ தளவாடங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆனால் மொத்த ராணுவ தளவாட உற்பத்தியில் 2 சதவீத அளவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்போது வகுக்கப்பட்டுள்ள புதிய ராணுவ உற்பத்தி கொள்கையின்படி அன்னிய முதலீட்டை நேரடியாக ஈர்க்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தியில் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளவும் வழி வகுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ராணுவ ஆயுத ஏற்றுமதி அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. ராணுவ ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக திகழும் இந்தியா இப்போது தனது கொள்கையில் மாற்றம் செய்து கொண்டுள்ளது. 2008-12-ம் ஆண்டுகளில் உலக அளவில் இந்தியா இறக்குமதி செய்துள்ள ஆயுதங்களின் அளவு 12 சதவீதம் என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

ஏடிஇஎக்ஸ் 2013 கண்காட்சி மூலம் சிறந்த தொழில்நுட்ப நாடுகள் கூட்டு சேர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக டிஆர்டிஓ தலைவர் அவினாஷ் சந்திரா தெரிவித்தார். இந்தியாவில் 8 பொதுத்துறை ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. 39 ஆயுத உற்பத்தி ஆலைகள் உள்ளன. ராணுவ ஆயுதங்iகளை தொடர்ந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கும் எந்த ஒரு நாடும் வளர்ச்சியடைய முடியாது என்று அவினாஷ் சந்திரா தெரிவித்தார். பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களை சுயமாக தயாரிப்பதில் இந்தியா முன்னேறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆயுதங்களைக் கண்டறியும் உபகரணம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு டிஆர்டிஓ விற்பனை செய்துள்ளது என்றும் சந்திரா கூறினார். ராணுவ தளவாட பொருள்களுக்கு ஆப்பிரிக்க சந்தை இன்னும் சில ஆண்டுகளில் விரிவடையும் என்றும் அவர் கூறினார்.

2005-ம் ஆண்டிலிருந்து இந்தியா, தென் கொரியா இடையே ராணுவ ஆயுத சப்ளை தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. 2010-ம் ஆண்டு இரண்டு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்படி தொழில்நுட்பம் மற்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது. இரு நாடுகளிடையே ராஜீய உறவு ஏற்பட்டு 40 ஆண்டு நிறைவைக் கொண்டாட உள்ளன.

- ஐ.ஏ.என்.எஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x