Published : 13 Nov 2013 04:10 PM
Last Updated : 13 Nov 2013 04:10 PM
பனிரெண்டு தகவல்கள் ‘பர்ஸ்’ஸனல் ஃபைனான்ஸ்’ விஷயத்தில் அடிப்படையானவை. அவற்றை ‘அ’ தொடங்கி ‘ஔ’ வரையில் அடுக்கும் புதிய ஆத்திசூடி இது. இந்த வாரம் ‘ஊ’ முதல் ‘ஏ’ வரை.
ஊசலாட்டம் வேண்டாம்!
முடிவெடுத்து முதலீடு செய்துவிட்டால் நீங்கள் எல்லாம் விஜய்போல ஆகிவிட வேண்டும். ஆம் உங்கள் பேச்சையே நீங்கள் கேட்கக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்னால் ஆயிரம் முறை ஆலோசனை செய்யுங்கள். இதில் போட்டால் நல்லதா, அதில் போட்டால் சரியாக இருக்குமா? அந்த முதலீட்டில் லாபம் அதிகமா? இந்த முதலீடு நல்ல விதமாக இருக்குமா? என்றெல்லாம் குழப்பிக்கொள்ளுங்கள். ஆனால், இது சரியாக இருக்கும் என்ற முடிவை எடுத்துவிட்டால் அதன் பிறகு குழப்பமே கூடாது.
நாம் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். பங்குச் சந்தை இருபதாயிரம் புள்ளிகள் இருக்கும்போது லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்கள் இலக்கு இரண்டு ஆண்டுகளில் லட்ச ரூபாய் இருபதாயிரம் ரூபாய் சம்பாதித்துத் தரவேண்டும் என்பது என்று வைத்துக்கொள்வோம். அடுத்த சில தினங்களில் பங்குச் சந்தை சரிந்து பதினெட்டாயிரம் புள்ளிகளுக்கு வந்துவிடுகிறது. உடனே தவறாக முடிவெடுத்துவிட்டோமோ என்று குழம்பக் கூடாது.
நம்முடைய பதற்றம் நம்மைத் தவறான வழியில் அழைத்துச் செல்லும். பங்குச் சந்தைக்குப் பதிலாக ஃபிக்சட் டெபாசிட்டில் போட்டிருக்கலாமோ என்று தோன்றும். உடனே மாற்றுவோம். அடுத்து ஓராண்டு கழித்துப் பங்குச் சந்தை இருபத்தி நாலாயிரம் புள்ளிகளில் இருக்க, வங்கி டெபாசிட் மிகக் குறைந்த வட்டியைக் கொடுத்திருக்கும். அச்சச்சோ. பங்குச் சந்தையில் இருந்து அவசரப்பட்டு வந்துவிட்டோமோ என்று மனம் புழுங்கும். இந்த ஊசலாட்டம் கூடாது!
வங்கிச் சேமிப்பு ஒருவிதமான முதலீடு... பங்குச் சந்தை வேறொரு விதமான முதலீடு. நமக்கு ரிஸ்க் வேண்டுமா, ரிட்டர்ன் வேண்டுமா? இவற்றைப் பொறுத்துத்தான் முடிவு எடுக்க வேண்டும். மனம் இங்கும் அங்கும் ஊசலாடக் கூடாது.
எஜுகேஷன் முக்கியம்!
முதலீட்டில் இது முக்கியமான விஷயம். எந்த முதலீடாக இருந்தாலும் கற்றுக்கொண்டு களம் இறங்குங்கள். கற்பது என்றால் முழுமையாகக் கற்க வேண்டும் என்று இல்லை. ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும். ஈரானில் சண்டை வரப் போகிறது என்றால் இங்கே பெட்ரோல் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்வதற்கு அந்தப் படிப்பு உதவும். யுலீப்ல பணம் போட்டீங்கன்னா உங்க லைஃப்ல இன்ஷூரன்ஸே போட வேண்டாம் என்று ஏஜெண்ட் சொன்னால் கேள்வி கேட்பதற்கு இந்தக் கல்வி உதவும். முதலீட்டுத் துறையில் நீங்கள் மாஸ்டராக வேண்டாம். ஆனால், அடிப்படையான விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் சில நேரங்களில் நம் முதலீட்டுக்கு உதவும் ஏஜெண்ட்கள் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காகச் சில முதலீட்டுத் திட்டங்களை நமக்குப் பரிந்துரைப்பார்கள். அந்த மாதிரி நேரத்தில் நாம் சுதாரிப்பாக இருக்க இந்தக் கல்வி உதவியாக இருக்கும்.
செய்தித்தாள் படித்தாலே ஓரளவுக்குக் கற்றுக்கொள்ள முடியும். அதில் எழும் சந்தேகங்களை இணையத்தில் புகுந்தோ இல்லை, அதற்கான புத்தகங்களைப் படித்தோ தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். மொத்தத்தில் எஜுகேஷன் முக்கியம்!
ஏமாற்றம் பழகு!
முதலீடு என்பதே ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அது சிலநேரங்களில் வாரிக் கொடுக்கும். சில நேரங்களில் வாரிவிடும். அதனால் சில நேரங்களில் ஏமாற்றம் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது எதனால் சிக்கல் வந்தது என்ற ஆராய்ச்சியில் இறங்கி அடுத்த முறை அதைச் சரிசெய்ய வேண்டுமே தவிர, ஏமாந்துட்டோமே என்று ஒடுங்கி உட்கார்ந்துவிடக் கூடாது.
ஏமாற்றம் பழக வேண்டும். முன்னொரு காலத்தில் சீட்டு கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாந்தவர்களிடம் இன்று பேசிப் பாருங்கள். ‘படுபாவி ஏமாத்திட்டுப் போயிட்டான்’ என்றுதான் சொல்வார்கள். முப்பது சதவிகிதம் நாற்பது சதவிகிதம் வட்டி தர முடியுமா என்று யோசிக்காமல் போய் ஏமாந்துவிட்டோம் என்று யாருமே நிதர்சனத்தை உணர்வதில்லை. மற்றவர்கள் அடைந்த ஏமாற்றத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த அளவு வரை சாத்தியம் என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப முதலீடுசெய்ய வேண்டும்.
இப்படிப்பட்ட ஏமாற்றங்களை அனுபவித்தோ அல்லது பிறர் அனுபவங்களைப் பார்த்தோ பழகிக்கொள்வதால் நமக்கு என்ன கிடைக்கும்? மிக முக்கியமான ஒரு புரிதல் கிடைக்கும். அதுதான் விதை நெல்லை எடுத்துப் பிரியாணி செய்யக் கூடாது என்பது! முதலீடு முக்கியம்தான். ஆனால், ஒருவேளை அந்த முதலீடு திரும்பக் கிடைக்காத சூழல் வந்தாலும் நம்மால் சமாளிக்க முடிய வேண்டும். அதைத்தான் முந்தைய ஏமாற்றங்கள் நமக்குப் பழக்கப்படுத்தும்.
வளரும்...
சி. முருகேஷ் பாபு - தொடர்புக்கு: cmbabu2000@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT