Published : 23 Nov 2013 11:33 AM
Last Updated : 23 Nov 2013 11:33 AM
நிறுவனங்களின் நிர்வாகவியல் விதிகள்
(Managerial theories of firm)
பொதுவாக நிறுவனங்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும். ஆனால் இந்தக் கோட்பாடு வேறு இரண்டு குறிகோள்களை முன்னிறுத்துகின்றது. ஒன்று விற்பனை வரவை உயர்த்துதல், மற்றொன்று சொத்து வளர்ச்சியை அதிகப்படுத்துதல்.
நவீன பெரிய நிறுவனங்களில், பங்குதாரர்கள் வேறாகவும், நிறுவனத்தை மேலாண்மை செய்பவர்கள் வேறாகவும் இருப்பதால், மேலாண்மை செய்பவர்கள் லாபத்தை மட்டுமல்லாமல் வேறு குறிக்கோள்களும் வைத்திருப்பார்கள் என்ற அடிப்படையில் இந்த கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலாளர்களின் சம்பளம், அதிகாரம் எல்லாம் நிறுவனத்தின் அளவு பெருகப்பெருக உயரும். எனவே நிறுவனத்தின் சொத்து மதிப்பை உயர்த்துவது மேலாளர்களின் குறிக்கோளாக இருக்கும்.
இந்த மாறுபட்ட குறிக்கோள்களை கொண்டுள்ளதால், இந்த நிறுவனங்கள் லாபத்தை எதிர்பார்க்கும் நிறுவனங்களைவிட அதிகமாக உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொருள்களை விற்பனை செய்ய முற்படுவார்கள்.
Management Utility Maximization
எல்லா நிறுவனங்களின் மேலாளர்களும் தங்களின் திருப்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று முயல்வார்கள். அவர்களின் திருப்தி எதன் மூலம் அதிகப்படுத்தப்படும்.? அதிக தொழிலார்களை வைத்து அதிகாரம் செய்வது, அதிக சம்பளம் வாங்குவது, நிறுவனத்தில் அதிக முதட்லீடை கையாள்வது என்ற மூன்றை சொல்லலாம்.
அதிக தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்களில் மேலாண்மை அமைப்பு பல படிகளை உடையதாக இருக்கும். அதிக தொழிலாளர்கள் உள்ள பெரிய நிறுவனங்களை எளிதில் மூடிவிடமுடியாது என்பதும் இதில் அடங்கும்.
பெரிய தொழில்நிறுவனங்களில் உள்ள மேலாளர்களுக்கு அதிக சம்பளமும், மற்ற வசதிகளும் கிடைக்கும். அதே போல் அதிக முதலீடுகளை நிறுவனங்கள் செய்யும் போது மேலாளர்கள் தாங்கள் விரும்பிய துறைகளில் முதலீடு செய்யலாம். இதுவும் அவர்களின் திருப்தியை அதிகரிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT