Published : 22 Jan 2014 11:10 AM
Last Updated : 22 Jan 2014 11:10 AM
வேலையின்மை (Unemployment): ஓர் அறிமுகம்
வேலையின்மைக்குப் பலவித வரையறைகள் இருந்தாலும், பொதுவாக வேலையில்லாமல் இருக்கும் நிலையே வேலையின்மை (Unemployment) ஆகும். அதாவது, வேலை செய்யக்கூடிய ஒருவர் வேலை தேடியும் (கடந்த ஒரு வருடத்தில் அல்லது ஒரு வாரத்தில்) அது கிடைக்கவில்லை எனில் அவரை வேலையில்லாதவர் என்கின்றோம்; செயல்திறன் உடைய தொழிலாளர்களில் (Active Labour Force) வேலை தேடி கிடைக்காதவர்களின் சதவீதம் வேலையின்மையின் சதவீதம் (Unemployment rate) எனப்படும்; வேலை செய்ய விரும்பாதவர்கள், இயலாதவர்கள் இதில் சேர்க்கப்படமாட்டார்கள்.
வேலையின்மையின் வகைகள்: தனி மனித காரணங்களினால் வேலை இருந்தும் வேலை செய்யாமல் இருப்பது என்ற வேலையில்லா நிலையினை தன்னிச்சை வேலையின்மை (Voluntary Unemployment) என்கிறோம். அதுவே பொருளாதார ஏற்ற இறக்கங்கள், சந்தையின் கட்டமைப்பு, அரசின் பொருளாதார கொள்கைகள், கல்வி, திறமை, போன்ற பல சமூக பொருளாதார காரணங்களினால் எழக்கூடியது “தன்னிச்சையற்ற வேலையின்மை” (Involuntary Unemployment).
வேறுவகையில் சொல்வதானால், வேலை தேடியும், பல காரணங்களினால் வேலை கிடைக்காமல் இருப்பதை இவ்வாறு குறிப்பிடுகிறோம். இந்த இரு பெரும் பிரிவுகளைத் தவிர வேலைவாய்ப்பின்மை பொருளாதாரத்தில் கீழ்கண்டவகையில் வகைப்படுத்தப்படும்.
நுகர்வோர் தேவை, தொழில்நுட்ப மாற்றங்களினால் பொருளாதார கட்டமைப்பே மாறும். ஒரு விவசாயப் பொருளாதாரம் தொழில் பொருளாதாரமாக மாறும்போது, விவாசாயத் தொழிலாளிகளுக்கு உடனடியாக தொழிற்சாலைகளில் வேலை கிடைக்காது. இவ்வாறு எழக்கூடியவை ‘கட்டமைப்பு வேலையின்மை’ (Structural Unemployment).
பொருளாதார மந்தம் தோன்றும் போதெல்லாம் எழக்கூடிய ‘சுழல் வேலையின்மை” (Cyclical Unemployment), ஒரு வேலையினை விட்டு வேறு நல்ல வேலை தேடுதல் போன்ற தாற்காலிக காரணங்களால் குறுகிய காலத்திற்கு மட்டும் எழக்கூடிய “பிறழ்ச்சி வேலையின்மை” (Frictional Unemployment) கிராமங்களில் அறுவடை இல்லாத காலங்களில் தோன்றுவது போன்ற “பருவ வேலையின்மை” (Seasonal Unemployment) என்ற பல வகை வேலையின்மைகளும் உண்டு.
ஒருவரே செய்து முடிக்கக்கூடிய வேலையினை, வேலையற்ற மற்ற குடும்ப உறுப்பினர்களும் இணைந்து செய்துகொண்டு எல்லோரும் வேலை செய்வதாக எண்ணிக்கொண்டிருப்பது போன்ற நிலையை கிராமங்களில் பார்க்கலாம். இதில் எல்லாருக்கும் வேலை இருப்பது போல் தெரிந்தாலும், மொத்த உற்பத்தி உயராமல் இருப்பதால், ஒருவரைத் தவிர மாற்றவர்கள் மறைமுகமாக வேலை இல்லாமல் இருப்பதுதான் உண்மை.
இதனை “மறைமுகமான வேலையின்மை” (Disguised Unemployment) என்கிறோம். வேலையின்மையினை வரையறுப்பதிலும், அளவிடுவதிலும், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் பல சவால்கள் உள்ளன. அவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT