Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM
ஒரு காலத்தில் சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையம் மிகவும் பிரசித்தம். ஒருங்கிணைந்த ரஷியா சிதறுண்ட பிறகு, ரஷியாவிலிருந்து கிடைக்கும் நிதி பெருமளவு குறைய, கலையிழந்து போனது ரஷிய கலாசார மையம்.
ஆனால் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு புதுப் பொலிவுடன் திரும்பிக் கொண்டிருக்கிறது இம்மையம். இரு நாடுகளிடையே உறவை மட்டுமே பேசி காலத்தைக் கடத்தாமல், சந்தைப் பொருளாதாரத்துக்கு ஏற்ப இரு நாடுகளிடையிலான தொழில், வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது இந்திய-ரஷிய தொழில் வர்த்தக சபை.
இதற்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக இந்திய, ரஷிய தனியார் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து பாலமாக செயல்படுகிறது ரஷியாவைச் சேர்ந்த விடிபி வங்கி.
2005-ம் ஆண்டில் பிரதிநிதி அலுவலகமாக செயல்பட்ட விடிபி, 2008- ம் ஆண்டில் டெல்லியில் கிளை அமைத்து செயல்படுகிறது. தென்னிந்தியாவில் உள்ள தொழிலதிபர்களைச் சந்திக்க வந்திருந்தார் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி யூரி யுகோவ்லெவ்.
பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள யூரி, சரளமாக ஆங்கிலத்தில் உரையாடியதால் அவரது கருத்துகளைப் பதிவு செய்வதில் எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. ரஷியாவின் தேசிய பானமான தேநீரை அருந்துக்கொண்டே அவரிடம் பேட்டியை ஆரம்பித்தேன்.
வங்கித் துறை மட்டுமல்லாமல் இந்தியா ரஷ்யா இடையேயான பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட பொதுவான சில விஷயங்களையும் பேசினோம். அந்த விரிவான பேட்டியிலிருந்து...
இந்தியாவில் உங்களது வங்கியை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது எப்படி?
இரு நாடுகளிடையிலான வர்த்தகம் போதுமான அளவுக்கு இல்லை என்று ரஷிய அரசு கருதியது. இதைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டு டெல்லியில் பிரதிநிதி அலுவலகம் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வர்த்தகத்தை மேம்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்தே முழு நேர வங்கி டெல்லியில் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் மேலும் ஒரு கிளை அமைப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.
இது அரசுத் துறை வங்கியா அல்லது தனியார் துறையைச் சேர்ந்ததா?
இந்த வங்கியில் ரஷிய அரசின் பங்களிப்பு 65 சதவீதமாகும். எஞ்சிய தொகை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு பொதுமக்களிடம் திரட்டப்பட்டது. இதன் மூலம் 800 கோடி டாலரைத் திரட்டியுள்ளது. மாஸ்கோவில் அமைந்துள்ள இந்த வங்கிக்கு இப்போது 20 நாடுகளில் கிளைகள் உள்ளன.
இந்தியாவில் விடிபி எவ்விதம் செயல்படுகிறது?
இந்தியாவில் விடிபி வழங்கும் காசோலைகளை உடனடியாக மாற்றும் வசதிக்கு ஹெச்டிஎப்சி வங்கி ஒப்புக் கொண்டுள்ளது. இதைப் போல மேலும் சில வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.
வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமே வங்கிச் சேவையா? பொதுமக்களுக்கான வங்கிச் சேவையை அளிக்கும் திட்டம் உள்ளதா?
இந்தியாவில் ரிடெய்ல் வங்கி அமைத்து செயல்படுத்துவதற்கான லைசென்ஸை ஆர்பிஐ-யிடமிருந்து பெற்றுள்ளோம். இருப்பினும் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். பொதுமக்களுக்கான வங்கி தொடங்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஆனால் விடிபி கேபிடல் மூலம் இந்திய பங்குச் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் ரஷியாவில் செயல்படுகின்றனவா?
ஐசிஐசிஐ வங்கி கடந்த 8 ஆண்டுகளாக செயல்படுகிறது. எஸ்பிஐ மற்றும் கனரா வங்கிகள் இப்போது கிளைகளைத் தொடங்கியுள்ளன.
எந்தெந்த இந்திய நிறுவனங்களுக்கு விடிபி கடன் வழங்கியுள்ளது?
வைரம், தங்கம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கீதாஞ்சலி, ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடன் வழங்கியுள்ளது.
இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்த விடிபி எந்த வகையில் உதவுகிறது?
சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறிய பிறகு தனியார் நிறுவனங்களுக்கு, அது இந்தியாவாக இருந்தாலும், ரஷியாவாக இருந்தாலும் நிதி உதவி தேவைப்பட்டது.
அத்தகைய நிதி உதவியை அளிப்பதோடு இரு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கிடையே தொழில் உறவு, ஏற்றுமதி அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கும் உதவுகிறது. இதன் மூலம் பொருளாதார உறவு, தொழில்துறை உறவு, இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவு மேம்பாட்டுக்கு விடிபி பாலமாக இருக்கிறது.
ரஷிய நிறுவனங்கள் இந்தியாவில் எத்தகைய பங்களிப்பை அளிக்க முடியும்?
ரஷியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத்தை அளிக்க முடியும்.
குறிப்பாக ஸ்டீல், மின்சாரம் உற்பத்தி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளது. அத்தகைய நிறுவனங்களின் உரிய கூட்டாளி நிறுவனத்தை அடையாளம் கண்டு அவற்றுக்கிடையிலான பேச்சுவார்த்தை, கூட்டு முயற்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை விடிபி எடுக்கிறது.
இப்போது ரஷிய நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றனவா?
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணியில் கேமன் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து ரஷிய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஹைதராபாத் விமான நிலைய சாலையும் ரஷிய நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் போடப்பட்டதுதான்.
ஹோசூரில் கமாஸ் எனும் ரஷிய நிறுவனம் கனரக வாகன தயாரிப்பு நிறுவனம் கட்டுமானம், நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குத் தேவையான கன ரக வாகனங்களைத் தயாரித்து வருகிறது.
செல்போன் மற்றும் எல்சிடி தயாரிப்பில் மைக்ரோ மேக்ஸ் நிறுவனமும் ரஷிய நிறுவனமே. செல்போன் சேவை அளிக்கும் எம்டிஎஸ் நிறுவனமும் ரஷிய நிறுவனத்தின் கூட்டாளி நிறுவனம்தான்.
போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் இந்தியாவிலிருந்து எத்தகைய பொருள்களை ரஷியா இறக்குமதி செய்கிறது?
தேயிலை உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருந்தாலும், ரஷிய இறக்குமதியில் 70 சதவீதம் இலங்கை தேயிலைதான். இதற்குக் காரணம், இரு நாடுகளிடையே தனியார் துறையினரிடையிலான வர்த்தக உறவு 1990-களுக்குப் பிறகு மேம்பாடு அடையாததுதான்.
இதை மேம்படுத்துவற்காகத்தான் தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்களிடம் விடிபி பேச்சு நடத்தி வருகிறது. டாடா நிறுவனம் ரஷியாவில் அலுவலகம் அமைத்திருந்தாலும், அந்நிறுவனத்தின் காபி, தேயிலை பங்களிப்பு வெகு குறைவுதான்.
இந்தியாவிலிருந்து எந்தெந்த துறைகளில் ரஷிய நிறுவனங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றன?
தென்னிந்தியாவில் ஆட்டோமொபைல் துறை துரித வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இங்குள்ள நிறுவனங்களிடமிருந்து ஆட்டோமொபைல் உதிரி பாகங்களைக் கொள்முதல் செய்ய ரஷிய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன.
மாஸ்கோவில் மட்டுமே பல லட்சம் கார்கள் ஓடுகின்றன. இதிலிருந்தே ஆட்டோமொபைல் துறையின் தேவை புரியும்.
மேலும், இந்தியாவின் எரிசக்தித் தேவையை ரஷியாவால் பூர்த்த செய்ய முடியும். நிலக்கரி, எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவை சப்ளை செய்வது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்படுகின்றன.
இந்திய நிறுவனங்களுக்கு எந்தெந்த துறைகளில் ரஷிய நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை அளிக்க முடியும் என கருதுகிறீர்கள்?
நீர் நிர்வாகம், கழிவு மேலாண்மை, மருத்துவமனைக் கழிவுகளை அகற்றும் தொழில்நுட்பம், பசுமை எரிசக்தி தொழில்நுட்பம், தாதுப் பொருள்களான இலுமினைட், டைட்டானியம் போன்ற வற்றை எடுப்பதற்கான தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை வழங்க ரஷிய நிறுவனங்கள் தயாராக உள்ளன.
இந்தியாவில் பிரம்மபுத்திரா, கங்கை போன்ற வற்றாத ஜீவநதிகள் உள்ளன. இங்கு தண்ணீர் போக்குவரத்து சேவை தொடங்கினால் வர்த்தகம் பெருகும். அதற்கான தொழில்நுட்பத்தை ரஷிய நிறுவனங்கள் வழங்கத் தயாராக உள்ளன.
ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரஷியாவின் சிபுர் நிறுவனம் கூட்டு சேர்ந்து பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தொழில்நுட்ப கருவிகளை சிபுர் அளிக்கிறது.
இந்திய பார்மா துறைக்கு ரஷியாவில் எதிர்பார்ப்பு எந்த அளவு உள்ளது?
இந்திய பார்மா நிறுவனங்களுக்கு ரஷியாவில் மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது. சிப்லா, டாக்டர் ரெட்டீஸ், ஹிமாலயா, ரான்பாக்ஸி உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் ரஷியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. சில நிறுவனங்கள் ரஷியாவில் பிரதிநிதி அலுவலகங்களை அமைத்துள்ளன. இருப்பினும் பார்மா துறையில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 5 சதவீதம் மட்டுமே.
மருந்து கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை ரஷியாவில் ஒரு முறை ஒரு மருந்துப் பொருளுக்கு லைசென்ஸ் பெற்றுவிட்டால் அந்த மருந்தை அனைத்து சிஐஎஸ் (Commonwealth of Independent States ) நாடுகளுக்கும் அனுப்ப முடியும்.
வேறெந்த இந்திய பொருள்களுக்கு ரஷியாவில் வரவேற்பு இருக்கிறது?
மீன், இறால், காய்கறிகள், முந்திரி போன்ற பருப்பு வகைகள், மிளகு, பட்டை, லவங்கம் போன்ற வாசனை பொருள்களுக்கு வரவேற்பு உள்ளது.
இரு நாடுகளிடையிலான வர்த்தகம் இப்போது 600 கோடி டாலராக உள்ளது. இதை 1,500 கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT