Published : 07 Nov 2013 12:00 AM
Last Updated : 07 Nov 2013 12:00 AM
பிராண்டட் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைக்குமாறு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திடம் மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிராண்டட் பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிக மைலேஜ் தருவதற்கு உதவுபவை. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல், டீசல் நுகர்வு குறையும். எனவே இவற்றின் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டால் இவற்றின் விலை குறையும், பொதுமக்களும் இதை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்குவர் என்று மொய்லி தெரிவித்துள்ளார்.
சாதாரண பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.45 ஆக தில்லியில் விற்பனையாகிறது. அதேசமயம் பிராண்டட் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 81.88 ஆகும்.
இதேபோல சாதா ரக டீசல் விலை லிட்டர் ரூ. 52.54. பிராண்டட் ரக டீசல் லிட்டர் ரூ. 67.93.
புதிய தலைமுறை வாகனங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு காரீயம் முற்றிலும் இல்லாத பெட்ரோல், டீசலைப் பயன்படுத்துவது அவசியம். இது பிராண்டட் பெட்ரோல், டீசலில்தான் உள்ளது.
2009-ம் ஆண்டில் பிராண்டட் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை அரசு உயர்த்தியது. சாதாரண ரக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் காட்டிலும் இது அதிகம். இதனால் சாதாரண ரக பெட்ரோல், டீசல் விலையை விட பிராண்டட் தயாரிப்புகள் விலை அதிகமாக உள்ளது. மேலும் கடந்த ஆண்டு பிராண்டட் பெட்ரோல், டீசலுக்கு அளித்து வரும் மானியத்தையும் அரசு நிறுத்தியது. இதனால் விலை மேலும் அதிகரித்தது. இவை காரணமாக பிராண்டட் பெட்ரோல், டீசல் உபயோகம் வெகுவாகக் குறைந்தது என்றும் பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002-ம் ஆண்டு பிராண்டட் பெட்ரோல், டீசல் அறிமுகப்படுத்தப்பட்டபோது தினசரி பெட்ரோல் 59 லட்சம் கிலோ லிட்டரும், டீசல் 34 லட்சம் கிலோ லிட்டரும் விற்பனையானது. இப்போது வெறும் 45 லட்சம் கிலோ லிட்டர் டீசலும் 9 லட்சம் கிலோ லிட்டர் பெட்ரோலும் விற்பனையானது.
பிராண்டட் எரிபொருள் மீதான வரி விதிப்பை நிதியமைச்சகம் ஆராய்ந்து அவற்றின் விற்பனை விலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். 2 சதவீதம் பிராண்டட் தயாரிப்புகளை பயன்படுத்தினால் அதன் மூலம் கணிசமான அளவுக்கு எரிபொருள் நுகர்வு குறையும் என்றும் சுட்டிக் காட்டினார்.
இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு உற்பத்தி வரி ரூ. 1.20. பிராண்டட் பெட்ரோலுக்கு லிட்டருக்கு உற்பத்தி வரி ரூ. 7.50. இதேபோல டீசலுக்கு உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ. 1.46 ஆக உள்ளது. பிராண்டட் டீசலுக்கு உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ. 3.75 ஆகும்.
பிராண்டட் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைப்பதால் அரசுக்கு பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு விடாது என்று குறிப்பிட்ட மொய்லி, இதன் மூலம் பெட்ரோல், டீசல் நுகர்வு குறைந்து பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்று சுட்டிக் காட்டினார்.
பிராண்டட் பெட்ரோல், டீசல் பயன்படுத்துவதால் இன்ஜினை பாதிக்கும் படிமங்கள் படியாது, துருபிடிப்பதும் குறையும், கரியமில வாயு வெளியேறுவது குறையும். அத்துடன் வாகனங்கள் நீண்ட காலம் உழைக்கும்.
அக்டோபர் 1-ம் தேதி எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி பிரமாண்டமான பிரசாரத்தை மொய்லி தொடங்கிவைத்தார். மிகவும் எளிமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எரிபொருளை சேமிப்பது குறித்த கருத்து பிரசாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
3 சதவீத எரிபொருள் சேமிப்பு மூலம் ஆண்டுக்கு ரூ. 16 ஆயிரம் கோடியை சேமிக்க முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இலக்கை எட்ட வேண்டும் என்பதற்காக ஊரக மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மின்துறை அமைச்சகத்துடனும் பெட்ரோலிய அமைச்சகம் பேச்சு நடத்துகிறது.
இலக்கை எட்டுவதற்குத் தேவையான ஒத்துழைப்பை அனைத்து அமைச்சகங்கள் மூலம்தான் பெற முடியும் என்பதால் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களுடன் விரைவில் பேச்சு நடத்த மொய்லி திட்டமிட்டுள்ளார்.
இலவச சைக்கிள் திட்டத்தை சில நகரங்களுக்கு விரிவுபடுத்துமாறு நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் பெட்ரோல் நுகர்வு குறையும் என்று மொய்லி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்ற கோரிக்கை பல்வேறு மாநில முதல்வர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. இலவச சைக்கிள் திட்டத்தை எண்ணெய் நிறுவனங்களும் செயல்படுத்தலாம் என்றும் மொய்லி கேட்டுக் கொண்டுள்ளார்.
எரிபொருள் சிக்கனத்தை செயல்படுத்தும் விதமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவன பணியாளர்கள் வாரத்தில் ஒருமுறையாவது பஸ், ரயில் போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT