Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM
பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்ட 1,400 பேருக்கு விதிக்கப்பட்ட ரூ. 130 கோடி தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்று பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) தெரிவித்துள்ளது.
இதில் சில வழக்குகள் 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முறைகேட்டில் சிக்கி குறைந்தபட்ச அபராதத் தொகையான ரூ. 15 ஆயிரத்தைக் கூட செலுத்தாதவர்கள் உள்ளதாக செபி தெரிவித்துள்ளது. தனி நபர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை சில லட்சங்கள் என தெரியவந்துள்ளது. சிலர் கோடிக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.
செபி சமீபத்தில் வெளியிட்ட பட்டியலில் மொத்தம் 1,373 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ. 130 கோடியாகும். இதில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், புரோக்கர்கள், வர்த்தக வங்கிகள் ஆகியனவும் அடங்கும்.
இதில் 2000-வது ஆண்டிலிருந்து அபராதம் செலுத்தாத நிறுவனங்கள், தனி நபர்களும் உள்ளனர். சமீபத்தில் செபி அமைப்புக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி அபராதம் செலுத்தாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி வருகிறது. இதுவரை 150 நிறுவனங்களுக்கு சொத்துகளை முடக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் அபராதமாக செலுத்த வேண்டிய தொகை ரூ. 1,545 கோடியாகும்.
முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கிய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதோடு மட்டுமின்றி அந்நிறுவனம், தனி நபரின் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளைக் கையகப்படுத்துவதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுத் தரவும் முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT