Published : 05 Dec 2013 10:24 AM
Last Updated : 05 Dec 2013 10:24 AM
உணவு பாதுகாப்பு மசோதா குறித்து சர்வதேச வர்த்தக அமைப்பு (டபிள்யு.டி.ஓ). மாநாட்டில் விவாதிக்க முடியாது என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா திட்டவட்டமாகக் கூறினார்.
பாலி மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படாது என்ற நிலை உருவாகியுள்ள சூழலில் மத்திய அமைச்சர் இவ்விதம் கருத்து தெரிவித்திருப்பது, ஒருமித்த கருத்து உருவாவது மிகவும் கடினம் என்ற சூழலை உருவாக்கியுள்ளது.
பாலியில் நடைபெற்ற டபிள்யூடிஓ அமைப்பின் அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டில் ஆனந்த் சர்மா பேசியது:
பாலி மாநாட்டில் எட்டப்படும் தீர்மானமானது ஒருமித்ததாகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கும் வகையில் டபிள்யுடிஓ விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அனைத்துமே விதிமுறைப்படியாகவும், நியாயமானதாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருத்தல் அவசியம்.
விவசாயத் தொழிலில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலன் கட்டாயம் காக்கப்பட வேண்டும். உணவு பாதுகாப்பு என்பது உலக அளவில் 400 கோடி மக்களுக்கு தேவையான ஒன்று. உணவு பாதுகாப்பு குறித்து டபிள்யுடிஓ மாநாட்டில் விவாதிக்க வேண்டியதில்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. உணவுப் பொருள்களை ஓரிடத்தில் சேமித்து அதை ஏழை மக்களுக்கு வழங்குவதே உணவு பாதுகாப்பு மசோதா. இதற்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். அதற்கேற்ப டபிள்யுடிஓ விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜி-33 மாநாட்டில் இந்தியா, சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் விவசாயம் குறித்து டபிள்யுடிஓ ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தின. ஏழை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலைக்குக் கொள்முதல் செய்யும் உணவு தானியங்கள் ஏழை மக்களுக்கு பொது விநியோகத் திட்டம் மூலம் குறைந்த விலைக்கு விற்பதற்கு ஆதரவு தெரிவித்தன. இந்தியாவின் உணவு பாதுகாப்பு மசோதா 82 கோடி மக்களுக்கு மாதத்துக்கு 5 கிலோ உணவு தானியம் ஒரு ரூபாய் முதல் ரூ. 3 விலையில் கிடைப்பதை உறுதி செய்கிறது. இந்த மசோதாவை நிறைவேற்ற ஆண்டுக்கு 6.20 கோடி டன் உணவு தானியம் தேவைப்படுகிறது.
வர்த்தக ஒப்பந்தமானது அனைத்து உறுப்பு நாடுகளின் கடமைகளையும் நிறைவேற்றும் வகையிலும் பசியை முற்றிலுமாக போக்கும் வகையிலும் உணவு கிடைப்பதை உறுதி செய்வதாகவும் இருத்தல் வேண்டும். ஆனால் இப்போது நடைமுறையில் உள்ள டபிள்யுடிஓ விதிமுறைகள் ஏற்புடையதாக இல்லை. இதை மாற்றி அனைவரும் ஏற்கும் வகையில் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சர்மா கூறினார்.
ஜி-33 மாநாட்டில் உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் 1986-88-ம் ஆண்டுகளில் உள்ள விலை நிலவரத்துக்கேற்ப போடப்பட்ட டபிள்யுடிஓ விதிமுறைகளின்படி வேளாண் மானிய ஒதுக்கீடு விலையைக் கணக்கிடக்கூடாது. கடந்த 25 ஆண்டுகளில் உலகம் முழுவதும் உணவுப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT