Last Updated : 23 Nov, 2013 04:01 PM

 

Published : 23 Nov 2013 04:01 PM
Last Updated : 23 Nov 2013 04:01 PM

ஏறுமுகத்தில் கிழக்கு தாம்பரம்

சென்னையின் நுழைவாயில் என்று தாம்பரத்தைச் சொல்வார்கள். சென்னையில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் பகுதிகளில் தாம்பரமும் ஒன்று. முன்பு மேற்கு தாம்பரமே முக்கியமான வர்த்தகப் பகுதியாக இருந்தது. இதனால் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர்களின் பார்வையும் மேற்கு தாம்பரத்தை நோக்கியே இருந்தது. இப்போது மேற்கு தாம்பரம் அளவுக்கு கிழக்கு தாம்பரமும் முக்கியப் பகுதியாக மாறிவிட்டது. எனவே இங்கு ரியல் எஸ்டேட் சந்தை நிலவரம் அதிகரித்துள்ளது என்கின்றன கட்டுமான நிறுவனங்கள். இதற்குச் சில காரணங்களையும் கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன.

சாலை, ரெயில் போக்குவரத்து வசதிகள் ஒருங்கிணைந்த பகுதியாகத் தாம்பரம் கிழக்குப் பகுதி தற்போது உள்ளது. வெளியூர்களுக்குப் பஸ் பயணம் என்றால் இரவு நேரத்தில்கூடக் கவலை இல்லை. மேற்கு தாம்பரம் அல்லது பெருங்களத்தூர் சென்றால் பஸ் வசதி இருக்கிறது. தாம்பரம் ரெயில் நிலையம், மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரத்துக்கு மத்தியப் பகுதியில் அமைந்திருப்பது போக்குவரத்து வசதிகளை எளிமைப்படுத்தி இருக்கிறது. வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமின்றி சென்று திரும்பிவிடலாம் என்று எண்ணுவது முக்கியக் காரணமாக இருக்கிறது.

அண்மைக் காலத்தில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள், தொழில் நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகள் தாம்பரம் கிழக்கு பகுதியில் வேகமெடுத்துள்ளன. மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரத்தை இணைக்கும் பாலம் வந்த பிறகு வளர்ச்சி வேகப்பட்டிருக்கிறது. இந்தக் காரணங்களால் கிழக்கு தாம்பரம் பகுதியில் பலரும் குடியேற ஆர்வம் காட்டுகிறார்கள். கூடவே முதலீடு நோக்கில் சொத்து வாங்குவதும் அதிகரித்து வருகிறது என்கின்றன கட்டுமான நிறுவனங்கள்.

மேற்கு தாம்பரத்தை விடக் கிழக்கு தாம்பரம் பகுதியில் வீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், இப்பகுதியில் குடியிருப்புத் திட்டங்களைச் செயல்படுத்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் இங்கு வீடுகள் அதிகம் விற்பனை ஆக விலை குறைவாக இருப்பதே காரணம் என்கிறார் சென்னை புறநகர் கட்டுமானச் சங்கத்தின் செயலாளர் பிரிட்டோ ஃபிரான்சிஸ். ‘‘கிழக்கு தாம்பரம் பகுதியில் 30 லட்சத்திற்குள் நல்ல வீட்டை வாங்கி விடலாம்.

சென்னையில் மற்ற எந்தப் பகுதியிலும் 30 லட்சத்திற்குள் வீடு வாங்குவது என்பது முடியாத காரியம். சென்னையில் மற்றப் பகுதிகளில் நில மதிப்பும் மிக அதிகம். கிழக்கு தாம்பரத்தில் ஒரு சதுர அடி ரூ,2,500 முதல் ரூ.3,500 வரை விற்பனையாகிறது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் நிலம் வாங்கவோ வீடு கட்டவோ மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்’’ என்கிறார் இவர்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x