Published : 11 Dec 2013 11:10 AM
Last Updated : 11 Dec 2013 11:10 AM
தனிச் சிறப்புத் தகுதி என்பது வேலைப் பகுப்பு முறையினால் (division of labour) ஏற்படும். ஒரு நிறுவனம் உற்பத்தி செய்யும் முறையைப் பல பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒவ்வொன்றிலும் ஒருவரைப் பயன்படுத்துவதற்கு வேலைப் பகுப்பு முறை என்று பெயர். ஒருவர் ஒரு வேலையைத் திரும்பத்திரும்பச் செய்யும்போது அதில் அவருக்கு பரிச்சயம் ஏற்பட்டு அவரின் உற்பத்தித் திறன் உயரும். மேலும் வேலை நேரம் விரையமாவதும் குறையும்.
ஒரு சின்ன குண்டூசியை செய்யும் முறையை சில பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று இரும்புக் கம்பி செய்வது, இரண்டு அதை சிறு அளவுகளாக வெட்டுவது, மூன்று, அதில் ஒரு முனையைக் கூராக்குவது, நான்கு, தலை குண்டு செய்வது, ஐந்து தலையை ஊசியின் மறு முனையில் ஒட்டுவது, ஆறு குண்டூசிக்கு பாலீஷ் போடுவது. இந்த ஆறு செயல் முறைகளையும் ஒருவரே செய்தால் எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று எண்ணிப்பாருங்கள். மாறாக, இந்த ஆறு பகுதிகளில் ஒவ்வொன்றிற்கும் ஒரு தொழிலாளி இருந்தால் அவர் அதே முறையை திரும்பத்திரும்பச் செய்வதால் அதில் தனிச் சிறப்புத் தகுதி பெற்று அவரின் உற்பத்தித் திறனும் உயரும். வேலைப் பகுப்பு முறையினால் ஒவ்வொரு பகுதியிலும் நாம் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அதிகமாகும். உற்பத்தியின் எல்லா பகுதியையும் ஒருவரே செய்யும் போது அவர் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வது நேர விரயமாகும், இதுவும் வேலைப் பகுப்பு முறையில் குறையும். வேலைப் பகுப்பு முறையினால் ஏற்படும் தனிச் சிறப்பு தகுதி உற்பத்தி அளவை பன்மடங்கு உயர்த்தும்.
வேலைப் பகுப்பு முறையினால் ஏற்படும் தனிச் சிறப்புத் தகுதி, ஒருவர் ஒரு பொருள் முழுவதும் செய்யக்கூடிய வாய்ப்பைக் குறைத்துவிடும், வேலை அலுப்பை ஏற்படுத்தும். மேலும், பொருளாதாரத்தில் பரிவர்த்தனை அவசியமாகும். வேலைப் பகுப்பு முறை இருப்பதால் யாரும் தனக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் செய்துகொள்ளமுடியாது. எனவே, நம்மிடையே பரிவர்த்தனையும், சந்தையிடலும் அதிகமாகும்.
வேலைப் பகுப்பு முறை விரிவடையும் போது உற்பத்திறன் உயர்ந்து மொத்த உற்பத்தி பெருகும். அதிக பொருட்களை சந்தையிட நமக்குச் சந்தையின் அளவு அதிகமாகவேண்டும். சந்தையின் அளவு அதிகமாகும்போது வேலைப் பகுப்பு முறையை விரிவுப்படுத்தி, தனிச் சிறப்புத் தகுதியையும் பெருக்கமுடியும்.
தனிச் சிறப்புத் தகுதி என்பது உழைப்புக்கு மட்டுமல்லாது நாடுகளுக்கும் பொருந்தும். ஒரு நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் அந்நாட்டில் ஒரு சில பொருட்களின் உற்பத்திக்குச் சாதகமாக இருக்கும். அதிகம் நிலம், உழைப்பாளர்கள் உள்ள நாடுகள் விவசாய உற்பத்தியில் அதிகம் கவனம் செலுத்துவது போல. நாடுகளுக்கிடையே வியாபாரம் ஏற்படுவதற்கும் தனிச் சிறப்புத் தகுதிதான் காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT