Published : 14 Jan 2014 11:41 AM
Last Updated : 14 Jan 2014 11:41 AM
அறிமுகம்
வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு, குறிப்பாக ஏற்றத்தாழ்வினைக் குறைப்பதற்கு அரசின் தலையீடு அவசியம். வறுமை என்றால் என்ன?, அதை எப்படி அளவிடுவது?, 121 கோடி இந்திய மக்களில் எத்தனை பேர் ஏழைகள்?, அவர்கள் யார் யார்?, எங்கே வசிக்கின்றார்கள்?, இதற்கான காரணம் என்ன?, இதை எப்படி போக்குவது?, அதற்கான திட்டங்கள் என்ன?, என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களே.
இந்த கேள்விகளுக்கான மிக தெளிவான துல்லியமான பதில்களை காணுவதில் பல சிக்கல்கள், சவால்கள் உள்ளன. உதாரணமாக, அன்று உணவின்மை வறுமையாக கருதப்பட்டது. இன்றைக்கு அதை மட்டும் வைத்து வறுமையினை மதிப்பிட இயலாது. பொருளாதார வளர்ச்சி காரணமாக வறுமை பற்றி நம் புரிதலும் மாறி வருகின்றது.
கல்வியின்மை, உடை மற்றும் உறைவிடமின்மை, வேலைவாய்ப்பின்மை, சுகாதாரமின்மை, சமூக ஏற்றத்தாழ்வுகள், போதிய வருமானமின்மை, போதிய சத்துணவின்மை, கைவிடப்பட்ட, ஆதரவற்ற நிலை, என வறுமைக்கு பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. இந்த பரிமாணங்கள் இடத்துக்கு இடமும், ஒவ்வொரு காலத்துக்கும், மாறிக்கொண்டும் வருகின்றன.
வறுமையினை கணக்கிட இவற்றில் எவற்றை எடுப்பது, எவற்றை விடுவது என்பது ஒரு சவாலான தெரிவு. அப்படியே தெரிவுகளை செய்தாலும் அவற்றை அளவிடுவது, நாடு முழுக்க, அதுவும் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில், கணக்கிடுவது போன்ற பணிகளும் சவால் நிறைந்தவையே. வறுமையினை ஒருவர் கண்கூடாக பார்க்க, உணர முடியும், அது பற்றி கோபப்பட முடியும், ஆனால், அதை வரையறுப்பதிலும், அளவிடுவதிலும் கணக்கிடுவதிலும்தான் பெரும் சவால்களும் சர்ச்சைகளும் தொடர்கின்றன.
வறுமை பற்றி இது போன்ற நடைமுறைக்குத் தேவையான அனைத்து கேள்விகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகான முயல்வதுதான் பொருளாதாரத்தின் ஒரு மிக முக்கிய பங்காகும். இந்த பெரும் பணியினை பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து செய்து வந்தாலும், அந்த முயற்சிகளில் அவர்கள் முழுமையாக வெற்றியடையவில்லை என்பதும், அதை ஒட்டிய விவாதங்களும் தொடர்கின்றன என்பதும் உண்மை. இது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுக்க உள்ள ஒரு நிலை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT