Published : 24 Mar 2014 10:29 AM
Last Updated : 24 Mar 2014 10:29 AM

தொழிலை எவ்வாறு தேர்வு செய்வது?

ஸ்டார்ட் அப் தொடரின் முதல் வார கட்டுரையை படித்த வாசகர் ஒருவர், ”தொழில் துவங்குவதற்கு விருப்பம்தான் முக்கியம் என்றும், மேலும் செய்யும் தொழிலை காதலிக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தீர்கள். ஆனால் என்னை போன்றவர்கள் தொழில் செய்ய ஆர்வமாக உள்ளோம்.

என்ன தொழில் செய்வது என்றுதான் தெரியவில்லை. என்னைப் போன்று பல நண்பர்கள் உள்ளனர். எங்களுக்கெல்லாம் என்ன கூற விரும்புகிறீர்கள்?” என்று மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தார். இது போல் பலர் இருப்பது ஆச்சரியமான விஷயம் அல்ல. இந்நிலைதான் தொழில் செய்ய விரும்புவோர்களின் முதல்கட்ட பயணம். இவர்கள் தங்களுடைய விருப்பத்தை/ கனவை நனவாக்க அடுத்தகட்டத்தில் கால் பதிக்க வேண்டும்.

வழிகள்

தொழில் சார்ந்த உண்மைக் கதைகள் பலவற்றை பத்திரிகைகள் மூலமாகப் படிக்க வேண்டும்; அல்லது வெற்றியடைந்த தொழிலதிபர்களின் சுயசரிதத்தைக்கூடப் படிக்கலாம். அடுத்த கட்டமாக தங்கள் சொந்தபந்தத்தில் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் தொழில் செய்பவர்களைப் பார்த்து நேரடியாக உரையாட வேண்டும்.

இவை தவிர, TiE (www.tie.org) போன்ற அமைப்புகளில் சேர்ந்து கொண்டால் தொழில் செய்ய விரும்பும் உங்களை போன்ற பலரை அந்த அமைப்புகளில் சந்திப்பதற்கு வாய்ப்புள்ளது. நீங்கள் தொழில் செய்யத் துடிக்கும் மாணவராக இருந்தால், பல கல்லூரிகளில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு அமைப்புகள் (ENTREPRENEURSHIP DEVELOPMENT CELL) உள்ளன.

அதன் முலம் உங்கள் இளம் வயதிலேயே தொழில் செய்வது பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் சுற்று வட்டாரத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான/ நீங்கள் மதிக்கக் கூடிய நபரை உங்களின் மானசீக குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள்! அவரிடம் தொழில்கள் ஆரம்பிப்பது பற்றிய உங்களது பல்வேறு கருத்துகளை/ எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இது தவிர உங்கள் நகரத்தில் நடக்கும் துறைசார்ந்த வர்த்தக கண்காட்சிகளுக்கு செல்வதன் மூலமும் நீங்கள் பயன் பெறலாம். தனி நபர் ஒருவர் தொழிலை தேர்ந்தெடுப்பதற்காக உண்டான வழிமுறைகளை பற்றி மேலே கண்டோம். பொதுவாக தொழில் அதிபர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு தொழில்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

குடும்பத் தொழில்

ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருக்கும் குடும்பங்களில் இருந்து வருபவர்கள், அவர்கள் குடும்பம் செய்து கொண்டிருக்கும் தொழில்களையோ அல்லது அதை சார்ந்த தொழில்களையோ செய்வார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அத்தொழிலைப் பற்றிய பரிச்சயம் அதிகமாக இருக்கும்.

இன்னும் சிலர் தாங்கள் பல ஆண்டுகள் வேலை பார்த்து விட்டு, அத்தொழிலைப் பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொண்டு, அதே துறையிலேயே தொழில் துவங்குவர். பல பெரிய தொழில்களை ஆரம்பித்தவர்கள் இந்த வகையில் உள்ளனர். இன்னும் சிலரோ தனக்கு தெரிந்தவர்கள் அனைவரும் ஒரே துறையிலேயே தொழில் செய்கிறார்கள், ஆகவே அதிலிருந்து தான் சிறிது மாறுபட்டு செய்ய வேண்டும் என்று எண்ணி குடும்ப தொழில்களில் இருந்து சற்று விலகி ஆரம்பிப்பர்.

திடீர் முடிவு

சில சமயங்களில் தான் மிகவும் ரசித்து அனுபவித்து செய்த வேலை திடீரென்று பறிபோனபின் என்ன செய்வது என்று திக்குமுக்காடி நிற்கும் பொழுது, வேறு வழியே இல்லை என்று தொழிலில் இறங்குவர். மற்றொரு வகையினரோ எதிர்வரும் வாய்ப்புகளை அறிந்து கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு இத்துறைதான் என்று இல்லை, வாய்ப்புகள் அதிகமாக உள்ள எந்த துறையாக இருந்தாலும் துணிந்து இறங்குவர்.

நீங்கள் எப்படிப் பட்டவர்? எதற்காக தொழிலில் இறங்க விரும்புகிறீர்கள்? அன்றாட செலவுகளை சமாளிப்பதற்காகவா? அல்லது பல நூறு கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவா? அல்லது அத்தொழிலை/ அத்துறையை நான் மிகவும் நேசிக்கிறேன்; எனது வாழ்வே அதுதான்; பணம் இல்லாவிட்டாலும் நான் சாகும் வரை அத்தொழிலை தான் செய்ய விரும்புகிறேன் என்று நினைப்பவரா? அல்லது இத்தொழிலை/ இச்செயலை லாப கண்ணோட்டம் இல்லாமல், இச்சமுதாயத்திற்காக செய்ய விரும்புகிறேன் என நினைப்பவரா நீங்கள்? இதில் எந்த ரகம் நீங்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

பலரும் தொழில் செய்ய முனையும் போதே தான் ரிலையன்ஸ் அம்பானி போல ஆகவேண்டும்; பில்கேட்ஸ் போல ஆகவேண்டும் என விரும்புகிறார்கள். அவ்வாறு விரும்புவதில் தவறு இல்லை. ஆனால் அது நீங்கள் செய்யப்போகும் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கு பாதகமாக ஆகிவிடக்கூடாது.

இரண்டு வாய்ப்புகள்

இன்று தொழில் செய்ய விரும்புவோர்கள் இரண்டு வகைகளில் தொழிலை தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கு பரிச்சயமான தொழில்களை, அனுபவம் உள்ள தொழில்களை, விவரம் தெரிந்த தொழில்களை ஆரம்பியுங்கள். அதில் சற்று லாபம் குறைந்து இருந்தாலும் பரவாயில்லை. உங்களின் உழைப்பு அதிகமாக தேவைப்பட்டாலும் பரவாயில்லை.

இதுபோன்ற தொழில்களில் உங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை (CONVICTION) கிடைக்கும். பெரும்பாலானோருக்கு இந்த அப்ரோச் மிகவும் பொருந்தும். இந்தியா போன்ற நாடுகளில் பழைய தொழில்களிலேயே புதிய யுக்தியை கொண்டு வந்து, பெரிய அளவில் நீங்கள் இறங்கும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு வாய்ப்புகள் ஏராளம். காய்கறி பழங்கள் விற்கும் பழமுதிர்ச்சோலை கான்செப்ட்டை எண்ணிப்பாருங்கள். எவ்வளவு பெரிய வெற்றி?

இன்று இந்தியாவில் பல நகரங்களில் வீட்டில் ஆகும் ரிப்பேர்களை சரிசெய்ய சரியான முறையில் நிறுவனங்கள் இல்லை. பிளம்பர், எலக்ட்ரீஷியன், பெயிண்டர், கார்ப்பெண்டர் போன்றவர்களை ஆன் டிமாண்டில் (ON DEMAND) தருவது இன்னும் பெரிய அளவில் வளரவில்லை. வீட்டில் ஆகும் சிறிய தினசரி ரிப்பேர்களுக்கு இன்சூரன்ஸ் தரும் நிறுவனங்கள் இல்லை.

வேலை ஆட்களுக்கு ரெஃபரென்ஸ் (REFERENCE) தரும் நல்ல இணையதளங்கள்/ நிறுவனங்கள் இல்லை. அந்தந்த நகரங்களில் நல்ல டாக்டர்களை ரெஃபர் (REFER) செய்வதற்கு நிறுவனங்கள் இல்லை/ இணையதளங்கள் இல்லை. இதைப் போல் எவ்வளவோ பிஸினஸ் வாய்ப்புகளைக் கூறிக் கொண்டே செல்லலாம்.

பார்ட்னர்ஷிப்

அதிக வாய்ப்புகள், வளர்ச்சி, லாபம் இருக்கக்கூடிய தொழிலை பாருங்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கும்பொழுது உங்களுக்கு அத்தொழிலில் பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். அத்தொழிலில் உள்ள வளர்ச்சியும் வாய்ப்புகளும் உங்களின் அனுபவமற்ற நிலையை ஈடுகட்டிவிடும். உங்களுக்கு அத்துறையில் அனுபவமில்லாவிட்டால், அத்துறையில் அனுபவம் உள்ள ஒருவரை பார்ட்னராக்கிக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் நிதித் துறையில் வல்லவர் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நீங்கள் செய்யவிரும்பும் பிஸினஸ் வீடு கட்டி கொடுப்பது என வைத்துக் கொண்டால். உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சிவில் என்ஜினியரை பார்ட்னராகவோ அல்லது பணியாளராகவோ எடுத்துக் கொள்ளலாம். முதன்முதலாக தொழில் செய்ய விரும்புவோர்கள் தங்களுக்கு பரிச்சயமான தொழில்களில் இறங்குவது சாலச் சிறந்தது.

இன்றைய தலைமுறையில் தொழில் செய்ய வேண்டும் என்றால் பல லட்சங்கள் கோடிகள் வேண்டும் என்று நினைக்கின்றனர். அது உண்மையல்ல; இன்றைய அறிவு சார் பொருளாதாரத்தில் உங்கள் மூளை ஒன்றே முதலீடாகப் போதும்.

இளைய தலைமுறையினர் தொழில்களில் இறங்கும் முன்பு தங்களுக்கு பரிச்சயம் இல்லாத பட்சத்தில், ஓரிரு ஆண்டுகள் அந்த புதிய தொழிலில் வேலை செய்து கற்றுக்கொண்ட பின் ஆரம்பித்தால் தொழில் செய்வது இலகுவாக அமையும். இக்கூற்று புதிய மற்றும் பழைய பொருளாதார தொழில்கள் இரண்டிற்கும் பொருந்தும்.

வாருங்கள் தோழர்களே, இன்னும் என்ன யோசனை? இனி வரும் வாரத்தில் தொழிலில் இறங்கும் முன் உங்கள் நிதியை எப்படி திட்டமிட்டு கொள்வது என்பது பற்றிப் பார்ப்போம்!

www.prakala.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x